பெண் வேட்பாளர்களைப் புறக்கணிக்கும் அரசியல் கட்சிகள்!

Published On:

| By Balaji

தெலங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்தின் அரசியல் கட்சிகள் ஒருசில இடங்களில் மட்டுமே பெண் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

சட்டமன்ற ஆயுட்காலம் முடியும் முன்பே அமைச்சரவையைக் கலைத்த தெலங்கானாவில் வரும் டிசம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 119 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள அம்மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தலில், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி,

காங்கிரஸ், பாஜக, தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடவுள்ளன. தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், வேட்பாளர்கள் பட்டியலையும் அறிவித்து வருகின்றன.

2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவுக்கு தெலங்கானாவில், பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்த போதிலும், தற்போது நடைபெறவுள்ள, தேர்தலில் அரசியல் கட்சிகள் பெண் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

காங்கிரஸ் கட்சி இதுவரை 100 வேட்பாளர்களுக்கு அவர்கள் போட்டியிடுவதற்கான பி-படிவத்தை வழங்கியுள்ளது. அதில் 11 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள் ஆவர். அதுபோன்று தெலங்கானாவில் ஆட்சி புரியும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி, நான்கு பெண் வேட்பாளர்களுக்கு மட்டுமே, வாய்ப்பு அளித்துள்ளது. ஆனால், இக்கட்சி 2014 தேர்தலின் போது ஆறு பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளித்தது என்பது நினைவுகூரத்தக்கது.

பெண் வேட்பாளர்களுக்கு எதிரான இந்த நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் குஷ்பு சுந்தர், “நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. இந்த மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் கிடைத்த நிலையில், மாநிலங்களவையில் ஒப்புதல் கிடைக்கவில்லை” என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் சார்பில், 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படாவிட்டாலும்கூட 11 இடங்கள் பெண் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி ஆறு இடத்திலிருந்து நான்கு இடமாகக் குறைத்துள்ளது” என்று விமர்சித்துள்ளார்.

பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்கவுள்ள, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஒரு பெண் வேட்பாளருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ராமா ராவின் பேத்தி தெலுங்கு தேசம் சார்பில், குல்காட்பள்ளி தொகுதியில் போட்டியிடவுள்ளார்.

தெலங்கானா ஜன சமிதி கட்சி ஒரு பெண்ணுக்கு மட்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது. அந்தக் கட்சி சார்பில் பவானி ரெட்டி சித்திபேட் தொகுதியில் போட்டியிடுகிறார்.

பாஜக சார்பில் 14 பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். எனினும் மாநிலத்தின் எஐஎம்ஐஎம் கட்சி சார்பில் ஒரு பெண் வேட்பாளர் கூட நியமிக்கப்படவில்லை.

இதுகுறித்து பேசிய மாநில பாஜக செய்தித் தொடர்பாளர், “இட ஒதுக்கீட்டில், சமூக சமநிலையை பின் பற்றுவதாகவும், மாநிலத்திலேயே, மற்ற கட்சிகளை விட, அதிகபட்சமாக 14 இடங்களைப் பெண் வேட்பாளர்களுக்கு வழங்கியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் – பகுஜன் (இடது) கூட்டணி கட்சிகளில், பகுஜன் (இடது) கட்சி சார்பில் சந்திரமுகி (32) எனும் திருநங்கை உட்பட 10 பெண்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், முன்னாள் அமைச்சர்கள் ஜே.கீதா ரெட்டி, டி.கே.அருணா, சுனிதா லட்சுமா ரெட்டி, சபிதா இந்திரா ரெட்டி ஆகிய பெண்கள் இந்த முறையும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share