�
மோடி அரசின் ஆட்சியில், விரைவில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டும் என்று ஆந்திர முதல்வர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
செப்டம்பர் 3ஆம் தேதி அமராவதியில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய ஆந்திரப் பிரதேச மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, ”மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பழிப்பு என்ற நடவடிக்கையால் சாதித்தது என்ன? வங்கிகளின் நிலை இப்போது எவ்வாறு இருக்கிறது என்பதையும் நாம் பார்க்கிறோம். உயர் மதிப்பு நோட்டுகள் மதிப்பு நீக்கம் செய்யப்படவேண்டும் என்றால், ரூ.2,000 நோட்டுகளின் தேவை என்ன? மோடி அரசால் பணமதிப்பழிப்பு நடவடிக்கையைச் சரியாகக் கையாள முடியவில்லை என்பதே உண்மை. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் சிறப்பான செயல்பாட்டைக் கொண்டுள்ளன என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், டிஜிட்டல் பணமும், ரொக்கப் பணமும் சரியான விகிதத்தில் புழக்கத்தில் இருப்பது அவசியம்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்னமும் பணத் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும், சமீபத்தில் வெளியான அறிக்கையின் படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கண்டது மோடி அரசின் ஆட்சியால் அல்ல; அது மக்களின் அடிப்படை வலிமைகளால் நிகழ்ந்தது. இப்போது ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு ஆகிய இரண்டு பெரிய பிரச்சினைகள் நம்மிடையே உள்ளன. மோடி ஆட்சியின் கீழ் விரைவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயாக உயர்ந்துவிடும். அதேபோல, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 100 ரூபாயாகச் சரிந்துவிடும்” என்றார்.�,