}பெட்ரோலுக்கு ஜிஎஸ்டி: எதிர்க்கும் மாநிலங்கள்!

Published On:

| By Balaji

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எந்தவொரு மாநிலமும் பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் சேர்ப்பதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை சமீப காலமாகவே அதிகரித்து வருவதால் உள்நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே பெட்ரோலியப் பொருட்களையும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்று நாட்டின் பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் எழுந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் கடைசியாக ஜூலை 21ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பெட்ரோலியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிப்பது குறித்த முடிவு மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில பொருட்களின் வரியை மட்டும் குறைத்த ஜிஎஸ்டி கவுன்சில், பெட்ரோலியப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி தொடர்பான எந்தவொரு முடிவையும் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க எந்தவொரு மாநில அரசும் விருப்பம் தெரிவிக்கவில்லை என்று மத்திய அரசு தற்போது தெரிவித்துள்ளது. இதுகுறித்து பெயரை வெளியிட விரும்பாத மூத்த அரசு அதிகாரி ஒருவர் ஆகஸ்ட் 22ஆம் தேதி டெல்லியில் *ஏசியன் ஏஜ்* ஊடகத்திடம் பேசுகையில், “கடைசி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒரு மாநிலம் கூட பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க வேண்டும் என்ற ஆதரவை வழங்கவே இல்லை. இதில் எந்தவொரு மாநில அரசுக்கும் விருப்பம் இல்லை. கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவந்தால் தங்களது வருவாயில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்தன. ஜிஎஸ்டிக்கு வெளியே உள்ள பொருட்கள் வெளியேவே இருக்கட்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இப்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடருக்கு நிவாரணம் பெற இதுபோன்ற வருவாய் மூலதனம் அவர்களுக்குத் தேவைதான்” என்று கூறினார். சில மாநிலங்கள் பெட்ரோலியப் பொருட்களுக்கான வரியைக் குறைக்க வேண்டும் என்று விவாதித்த நிலையில், கர்நாடக மாநிலம் சமீபத்தில் அதன் வரியை உயர்த்தியதாகவும், இது அரசியல் சார்ந்த விவகாரமாக மட்டுமே உள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share