[பெட்ரோலிய விலை உயர்வு தற்காலிகமே!

Published On:

| By Balaji

இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வுக்குப் பின்னால் வெளிப்புறக் காரணிகள் இருப்பதாகவும், இந்த விலை உயர்வு தற்காலிகம்தான் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோலியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், லாஜிஸ்டிக் துறையினரும், பொதுமக்களும் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் மத்தியில் ஆளும் மோடி அரசை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடி வருகின்றன. மேலும், பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. பொதுத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், நரேந்திர மோடிக்கு எதிரான அதிர்வலைகள் மக்களிடையே அதிகமாகியுள்ளது. இந்நிலையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வெளிப்புறக் காரணிகள்தான் காரணம் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

செப்டம்பர் 2ஆம் தேதி சூரத் நகரில் நடந்த ஜவுளி மற்றும் பிளாஸ்டிக் முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் இதுகுறித்து மேலும் கூறுகையில், “நான் இரண்டு காரணிகளைக் குறிப்பிட விரும்புகிறேன். இவை இரண்டும் வெளிப்புறக் காரணிகள். பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு (OPEC) தனது தினசரி உற்பத்தி அளவை 10 லட்சம் பேரல்களாக உயர்த்துவதாக உறுதியளித்தது. ஆனால் அந்த உறுதியைக் காப்பாற்றவில்லை. அதேபோல, வெனிசுலா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதால் கச்சா எண்ணெய்யின் விலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாவதாக, சர்வதேச நாணயங்களின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராகச் சரிவைச் சந்தித்துள்ளன. இக்காரணிகளால்தான் இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைச் சந்திக்கின்றன. இந்த உயர்வு தற்காலிகமானதுதான்” என்று தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share