திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பூம் பூம் மாட்டுக்கார சமூகத்தினர்களையும் பழங்குடி இனப்பட்டியலில் சேர்க்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இந்து ஆதியன் பழங்குடியின முன்னேற்றச் சங்கம் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்ப்பட்டது. அதில் “தங்களுடைய சமூகத்தினர்கள் நாகை, கடலூர், திருச்சி, திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் அதிகமாக வசித்து வருகின்றனர். இவர்கள், வீடு, நிலம் இல்லாத நிலையில், சமூகத்தில் அங்கீகாரமும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்துள்ளனர். அதனால் குழந்தைகளின் கல்வி, இடஒதுக்கீடு என பல பாதிப்புகளை நாங்கள் சந்தித்து வருகிறோம். ஆனால் மற்ற மாவட்டங்களின் வசிக்கும் பூம் பூம் மாட்டுக்கார சமூகத்தினைச் சேர்ந்தவர்களை பழங்குடியினத்தில் சேர்த்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, திருவாரூர் மாவட்டத்தில் வசிக்கும் பூம் பூம் மாட்டுகாரர் சமூகத்தினர்களையும் பழங்குடியின இனத்தில் சேர்த்து பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று(ஆகஸ்ட் 23) நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் முன்பு வந்தது. அப்போது நீதிபதிகள் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்குத் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு பிரிவாகவும், மற்ற மாவட்டங்களில் பழங்குடி இனமாகவும் ஏன் வைக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினர். மேலும் இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கு மீதான விசாரணையை 31 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
�,