�
வடமாநிலங்களிலிருந்து சேலம் மார்க்கெட்டுக்கு வரும் பூண்டின் வரத்து அதிகரித்ததால் பூண்டின் விலை மிகவும் குறைந்துள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப்பிரதேசம் ஆகிய வட மாநிலங்களில் அதிகளவில் பூண்டு உற்பத்தி செய்யப்பட்டு அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இங்கு கடந்த 15 நாட்களாக அதிகமாக பூண்டு அறுவடை செய்யப்பட்டு வருவதால் சேலம் மார்க்கெட்டுக்கு பூண்டின் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மார்கெட்டில் இதன் விலை மிகவும் குறைந்து காணப்படுகிறது.
இதுகுறித்து, சேலம் மார்க்கெட்டின் மொத்த வியாபாரிகள் கூறுகையில், ”சேலம் மார்க்கெட்டில் தமிழகம் முழுவதுமுள்ள சில்லறை வியாபாரிகள் மளிகைப் பொருட்களை வாங்கி தங்களது மளிகைக் கடைகளில் விற்பனை செய்கின்றனர். கடந்த மாதம் பூண்டு வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. ஆனால் கடந்த சில வாரங்களாக நிலைமை முற்றிலும் மாறி, பூண்டின் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு 50 டன்னிலிருந்து 60 டன்வரை சேலம் மார்க்கெட்டில் பூண்டு வந்துகொண்டிருக்கிறது.
தற்போதும் பூண்டின் வரத்து அதிகமாக இருப்பதால் விலை கடந்த மாதத்தைவிட கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதாவது, கடந்த மாதம் ரூ.130க்கு விற்பனையான ஒரு கிலோ பூண்டு தற்போது 70 ரூபாயிலிருந்து 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வரும் வாரங்களில் இதன் விலை இன்னும் சரியலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, வாடிக்கையாளர்கள் மார்கெட்டிலேயே பூண்டு வாங்கிக் கொள்ளலாம்” இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.�,