~புளித்த மாவு: தாக்கப்பட்ட எழுத்தாளர் ஜெயமோகன்

Published On:

| By Balaji

பல்வேறு இலக்கிய சர்ச்சைகளுக்குப் புகழ் பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன், ஒரு மாவு பாக்கெட் சர்ச்சையால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

பல்வேறு விருதுகள் பெற்ற புகழ்மிக்க எழுத்தாளரான ஜெயமோகன் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில், சாரதா நகரில் வசித்துவருகிறார். ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரியான ஜெயமோகன் பெரும்பாலும் வீட்டிலிருந்துதான் இலக்கியப் படைப்புகளை எழுதுவார்.

அவரது மகன் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகச் சேர்ந்துவிட்டார். சில நாட்களுக்கு முன் ஜெயமோகனின் மனைவி கேரளாவிலுள்ள நெய்யாற்றங்கரை பகுதிக்குச் சென்றிருந்ததால், ஜெயமோகனின் வீட்டில் அவரைத் தவிர யாரும் இல்லை.

இந்த நிலையில் தன் வீடு அமைந்திருக்கும் சாரதா நகர் பகுதியில் இருக்கும் வசந்தம் என்ற கடைக்கு நேற்று மாலை சென்ற ஜெயமோகன், இரு மாவு பாக்கெட்டுகள் வாங்கியிருக்கிறார். வீட்டில் யாரும் இல்லாததால் மாவு வாங்கி தோசை தயாரிக்கலாம் என்ற எண்ணத்தில்தான் ஜெயமோகன் மாவு வாங்கச் சென்றார். மாவு வாங்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பிய ஜெயமோகன் கொஞ்ச நேரத்தில் மீண்டும் கடைக்குச் சென்றிருக்கிறார். அப்போது அங்கே என்ன நடந்தது என்பதை வசந்தம் கடைக்குப் பக்கத்தில் இருக்கும் டீக்கடை மாஸ்டரே சொல்லுகிறார்.

“நேத்து ஈவினிங் மாவு வாங்க ஒரு ஆளு வந்தாரு பாத்துக்கிடுங்க. மாவு வாங்கிட்டுப் போய் ஒரு அரைமணி நேரத்துல திருப்பி வந்துட்டாரு. பழைய மாவை கொடுத்திருக்கீங்கனு சத்தம் போட்டாரு, கடை ஓனரோட வீட்டுக்கார அம்மாதான் நின்னாங்க. அவங்க மேல மாவை தூக்கி வீசிட்டாரு. அதைப் பாத்துட்டு ஓனரு வேகமா வந்து ரெண்டு பேருக்கும் தகராறு ஆகி அடிதடியும் ஆயிடுச்சு” என்கிறார் டீ மாஸ்டர்.

வீட்டுக்குச் சென்ற தன்னை மீண்டும் வந்து தாக்கியதாக ஜெயமோகன் தனது இணையதளத்தில் எழுதியிருக்கிறார்.

“இச்செய்தியைப் பற்றி பலர் கேட்டனர். சேதி உண்மை. ஒரு சிறு விவகாரத்தால் நான் தாக்கப்பட்டேன். அருகில் உள்ள வசந்தம் கடையில் இரு பாக்கெட் தோசை மாவு வாங்கினேன் . இரண்டு நாள் பழைய புளித்த மாவைக் கொடுத்துவிட்டார்கள். கடையில் இருந்தவர் உரிமையாளரின் மனைவி. பாக்கெட்டை திரும்பி எடுக்க மறுத்து என்னை வசைபாட ஆரம்பித்தார். நான் கோபமாக மாவு பாக்கெட்டுகளை நீயே வைத்துக் கொள் என வீசிவிட்டுத் திரும்பினேன். அருகே அவள் கணவன் நின்றிருந்தான். உரிமையாளன் . பெரிய குடிகாரன். ஏற்கனவே குடித்து தகராறு செய்தபடி நின்றிருக்கிறான்.

என்னைத் தாக்க ஆரம்பித்தான். தாடையில் அடித்தான். கீழே விழுந்தபோது உதைத்தான். என் கண்ணாடி உடைந்தது. பலமுறை தாக்கி கெட்ட வார்த்தை சொன்னான். அவனை பிடித்து அகற்றினர் அவனுடைய கடை வேலையாட்கள் . வீடு வந்தேன். அதற்குள் வீட்டுக்கு வந்து என் மனைவியையும் மகளையும் வசைபாடினான் . வீட்டுக்குள் நுழைய முயன்றான். அதன் பின்னரே காவல் நிலையம் சென்று புகார்கொடுத்திருக்கிறேன் . காவல் நிலையம் சென்ற பின்னர் தான் ஒரு கேடியின் தொடர்புகள் புரிந்தது . வழக்கறிஞர்கள், அரசியல் தலைவர்கள் வந்து அவனுக்காக வாதாடினார்கள்

ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருக்கிறேன் . சிறு காயங்கள் உள்ளன . வழக்கு பதிவு செய்யப்படும் என நினைக்கிறேன் . நீதி கிடைக்குமென்றும் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார் ஜெயமோகன்.

நேசமணி நகர் காவல் நிலையத்தில் ஜெயமோகன், வசந்தம் கடை என இரு தரப்பிலும் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. தன்னைத் தகாத வார்த்தைகள் சொல்லியபடி தாக்கியதாக ஜெயமோகன் புகார் அளித்திருக்கிறார். வசந்தம் கடை உரிமையாளர் செல்வம், தனது மனைவியை ஜெயமோகன் அநாகரிகமாகத் திட்டினார் என்று புகார் கொடுத்திருக்கிறார். இரு தரப்புப் புகார்களின் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள் நேசமணி காவல் நிலையத்தில்.

ஜெயமோகன், கடைக்காரரின் மனைவியை சாதிப் பெயர் சொல்லி திட்டியதாகவும் அந்தக் கடையின் அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் கூறுகிறார்கள்.

கடைக்காரர் செல்வத்தை இன்று கைது செய்துள்ளது போலீஸ்.

**

மேலும் படிக்க

**

**[முதல்வரை வரவேற்காத பன்னீர்செல்வம் மகன்!](https://minnambalam.com/k/2019/06/15/43)**

**[குடிநீருக்கான பணம் குப்பைத்தொட்டிக்குப் போனது: துரைமுருகன்](https://minnambalam.com/k/2019/06/14/17)**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://minnambalam.com/k/2019/06/14/65)**

**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share