~புல்வாமா தாக்குதல்: மோடிக்குப் பெருகும் ஆதரவு!

Published On:

| By Balaji

புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடிக்கு பொதுமக்களிடம் ஆதரவு கூடியுள்ளதாக டைம்ஸ் நவ் ஊடகம் மற்றும் வி.எம்.ஆர். கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

பிப்ரவரி 5 முதல் 21 வரையிலான காலகட்டத்தில் தேர்தல் கருத்துக்கணிப்பை டைம்ஸ் நவ் ஊடகமும், வி.எம்.ஆர். நிறுவனமும் இணைந்து நடத்தியுள்ளன. இந்தக் கருத்துக்கணிப்பு நடந்த சமயத்தில்தான் (பிப்ரவரி 14) புல்வாமாவில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் தற்கொலைப் படைத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். அதன்பிறகான பாலகோட் பதிலடித் தாக்குதல் உள்ளிட்ட மத்திய அரசின் செயல்பாடுகளால் மோடியின் மதிப்பு 7 விழுக்காட்டுக்கும் மேல் கூடியுள்ளதாக இந்த கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

இந்தக் கருத்துக்கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 52 விழுக்காட்டினரும், ராகுல் காந்திக்கு 27 விழுக்காட்டினரும் ஆதரவளித்துள்ளனர். 7.3 விழுக்காட்டினர் மட்டுமே பிராந்திய கட்சிகளின் தலைவர்களுக்கு ஆதரவளித்துள்ளனர். இதே கருத்துக்கணிப்பு ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டபோது 44.4 விழுக்காட்டினர் மோடிக்கும், 30 விழுக்காட்டினர் ராகுல் காந்திக்கும் ஆதரவளித்திருந்தனர். பிராந்திய கட்சிகளின் தலைவர்களுக்கு அப்போது 13.8 விழுக்காட்டினர் ஆதரவளித்திருந்தனர். இதனால் புல்வாமா தாக்குதலுக்கு பிந்தைய செயல்பாடுகளால் மோடிக்கு 7 விழுக்காடு ஆதரவு பெருகியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

அதே சமயத்தில் 2019இல் நம்பகமான மாற்றுத் தலைவராக 43 விழுக்காட்டினர் ராகுல் காந்தியை தேர்வு செய்துள்ளனர். மோடி அரசு குறைந்தபட்ச தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியிருப்பதாக 46 விழுக்காட்டினரும், அதிகபட்ச வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்பதாக 27 விழுக்காட்டினரும் கூறியுள்ளனர். தேர்தலில் முக்கியப் பிரச்சனையாக வேலைவாய்ப்பின்மை இருக்குமென 40 விழுக்காட்டினரும், வேளாண் திட்டங்கள் இருக்குமென 17.7 விழுக்காடும், ராமர் கோயில் விவகாரம் இருக்குமென 14 விழுக்காட்டினரும் கூறியுள்ளனர்.

இந்தக் கருத்துக்கணிப்பு நாடு முழுவதும் உள்ள 690 இடங்களில் 14,431 வாக்காளர்களிடம் நடத்தப்பட்டதாக டைம்ஸ் நவ் ஊடகம் தெரிவித்துள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share