~புல்வாமா தாக்குதல்: மம்தா எழுப்பும் கேள்விகள்!

Published On:

| By Balaji

காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பிப்ரவரி 14 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் உயிரிழந்தது இந்தியா முழுதும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றதாக செய்திகள் வந்த நிலையில், இந்த சம்பவம் பற்றி மேற்கு வங்க முதல்வரும், திருணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி பல சந்தேகங்களைக் கிளப்பியுள்ளார்.

இன்று (பிப்ரவரி 18) கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி,

“புல்வாமா தாக்குதல் தேர்தல் நேரத்தில் நடத்தப்பட்டது ஏன் என்று எனக்கு ஆச்சரியமாகவும், சந்தேகமாகவும் இருக்கிறது. பிப்ரவரி 8 ஆம் தேதியே மத்திய அரசுக்கு உளவுத்துறை ஏஜென்சிகளிடம் இருந்து, தேர்தலை முன்னிட்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று எச்சரிக்கைத் தகவல் வந்திருக்கிறது. ஆனால் உளவுத் துறையின் அந்த எச்சரிக்கை குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? தாக்குதல் அபாயம் பற்றிய எச்சரிக்கை அனுப்பப்பட்ட நிலையிலும், துணை ராணுவப்படையினரின் 78 கான்வாய்கள் ஒரே நேரத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டது ஏன்? தேர்தல் நேரத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்படாமல் தடுக்கத் தவறியது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்று கூறினார் மம்தா பானர்ஜி.

மேலும் அவர், “பாஜக ஆர்.எஸ்.எஸ். சக்திகள் இந்தத் தாக்குதலை அடுத்து மேற்கு வங்க மாநிலத்தில் வன்முறையைத் தூண்டுவதற்கு முயற்சி செய்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கையில் தேசியக் கொடிகளை ஏந்திக் கொண்டு, இரவு நேரங்களில் தெருக்களில் திரிந்து பிரச்சினைகளை உண்டாக்குவதாக எங்களுக்குத் தகவல்கள் வந்திருக்கின்றன. தேசியவாதம் என்று சொல்லிக்கொண்டு இப்படிப்பட்ட செயல்பாடுகளில் இறங்குவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதுபோன்ற செயல்பாடுகளை புறக்கணிக்குமாறு மக்களை கேட்டுக் கொள்கிறோம்” என்றும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

காஷ்மீர் தாக்குதல் பற்றி இதுவரை எந்த அரசியல் தலைவரும் தொடுக்காத கேள்விகளை மம்தா பானர்ஜி இன்று எழுப்பியிருக்கிறார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share