புல்வாமா தாக்குதல்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள்!

Published On:

| By Balaji

நாட்டையே உலுக்கிய புல்வாமா தாக்குதல் சம்பவத்தையொட்டி நேற்று டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. “தீவிரவாதச் சவால்களை எதிர்கொள்வதற்கான உறுதி மற்றும் தகர்த்தெறியும் திறனை இந்தியா காட்டும்” என்று இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோராவில் பிப்ரவரி 14ஆம் தேதி சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது ஜெய்ஷ் இ அகமது என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அதில் அகமது என்ற நபர் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினார். இந்தத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்தத் தீவிரவாதச் செயல்பாட்டுக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக நேற்று (பிப்ரவரி 16) டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில், தீவிரவாதத்துக்கு எதிரான வலுவான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சி ஆகிய இருதரப்பிலும் உறுதி எடுக்கப்பட்டது.

பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காகப் பாதுகாப்புப் படையுடன் ஒற்றுமையாக இருப்போம் என்று தெரிவித்ததுடன், தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்துக்குக் கண்டனங்களும் நிறைவேற்றப்பட்டன.

இந்தியா எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருவதாக இக்கூட்டத்தில் கூறப்பட்டது.. எனினும் பாகிஸ்தானின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ”தீவிரவாதச் சவால்களை எதிர்கொள்வதற்கான உறுதி மற்றும் தகர்த்தெறியும் திறனை இந்தியா காட்டும். இந்தச் சவால்களை எதிர்த்துப் போராடுவதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்த ஒட்டுமொத்த நாடும் ஒருமித்த குரலில் பேசுகிறது. இந்தியாவைப் பாதுகாப்பதில் நமது பாதுகாப்புப் படைகளுடன் நாம் ஒற்றுமையுடன் நிற்போம்” என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் குலாம் நபி ஆசாத், ஆனந்த சர்மா, ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரும், திருணமூல் காங்கிரஸ் சார்பில் சுதிப் பந்த்யோபாத்யாய, தெரக் ஓ பிரைன் ஆகியோரும், சிவசேனா சார்பில் சஞ்சய் ராவத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டி.ராஜா, தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பில் ஃபரூக் அப்துல்லா, தெலங்கானா ராஷ்ட்டிர சமிதியின் சார்பில் ஜிதேந்திர ரெட்டி, லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் ராம் விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மற்றும் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, ”பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் உணர்ச்சிகரமான சூழ்நிலையைக் கையாள வேண்டும்,புல்வாமா தாக்குதலுக்கு உடனடியாக வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் மற்ற மாநிலத்தில் உள்ள காஷ்மீர் மாணவர்கள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share