புல்வாமா ஆபரேஷன்: 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

Published On:

| By Balaji

புல்வாமாவில் இன்று (ஏப்ரல் 1) காலை பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், 3 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் மீது விமானத் தாக்குதல் நடத்தியது. சமீபத்தில் இந்தியத் தேர்தலுக்கு முன் மீண்டும் ஏதோ ஒரு ராணுவ நடவடிக்கை இருக்குமோ என தான் அச்சப்படுவதாகப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருந்தார். இதனால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது.

இதனிடையே பாகிஸ்தான் தீவிரவாதிகள் நேற்று காலை ரஜோரி மாவட்டம் நவுசாரா எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மற்றும் கிராமங்களைக் குறிவைத்து சிறிய ரக வெடிகுண்டுகள், ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

இதற்கு இந்தியா பதிலடி கொடுத்திருக்கிறது. எனினும் அப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் நேற்று இரவு முதல் பாதுகாப்புப் படை வீரர்கள், புல்வாமா ஆபரேஷன் பெயரில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை லசிபோரா என்ற இடத்தில் தீவிரவாதிகளுக்கும், வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 வீரர்கள் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து, வெடி பொருட்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

புல்வாமா ஆபரேசனில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ள ஸ்ரீநகர் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கோல் ராஜேஷ் கலியா, தொடர்ந்து பாதுகாப்புப்படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share