புயல் பிரச்சினையை திசைதிருப்பவே பாஜக முழுஅடைப்பு!

Published On:

| By Balaji

“புயல் சேதத்தினை கண்டுகொள்ளாத மத்திய அரசின் பாராமுகத்தை திசைதிருப்பவே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவமதிக்கப்பட்டதாக கூறி குமரியில் பாஜகவினர் முழு அடைப்பு நடத்தியுள்ளனர்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார்.

கஜா புயலின் காரணமாக நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் குடிநீருக்கும், உணவுக்கும், மின்சாரத்திற்கும் வழியின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இரு தினங்களுக்கு முன்பு இருமுடி கட்டிக் கொண்டு சபரிமலை சென்றார். அவரை காரில் சபரிமலை செல்ல போலீஸ் அனுமதிக்கவில்லை. அந்த சமயத்தில் அமைச்சருக்கும், பத்தினம்திட்டா காவல் துறை கண்காணிப்பாளர் யுதீஷ் சந்திராவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைக் கண்டித்து நேற்று (நவம்பர் 23) பாஜக சார்பில் குமரி மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இதனை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “தமிழகத்தில் உள்ள ஒரே மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் பாதிப்புக்குள்ளான பகுதிக்கு உடனடியாக செல்லவில்லை. புயல் சேதப்பிரச்சனையில் மத்திய அரசின் பாராமுகத்தை திசை திருப்புவதற்காக மத்திய அமைச்சர் பக்தர் வேடத்தில் சபரி மலைக்குச் சென்று அங்கு அவர் அவமானபடுத்தப்பட்டதாகக் கூறி கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக முழு அடைப்புப்போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது. இதற்காக நேற்றைய தினமே அரசு பேருந்துகள் பலவற்றை பாஜகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளனர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒரு மத்திய அமைச்சர், மாநிலத்தில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும்போது உதவிக்கரம் நீட்டுவதற்கு பதிலாக வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல திசை திருப்பும் முயற்சியிலும், வன்முறையைத் தூண்டுவதிலும் ஈடுபட்டிருக்கிறார்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

“மார்த்தாண்டம் மேம்பாலம் கட்டுமானப்பணியில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளதாக அப்பகுதி மக்களுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது கடுமையான கோபம் உள்ளது. இப்பிரச்னையை திசை திருப்புவதற்காகவும் பாஜகவினர் சபரிமலை பிரச்சனையை வைத்து நாடகமாடுகின்றனர் என்பதே உண்மை” என்று குறிப்பிட்டுள்ள பாலகிருஷ்ணன், மத்திய அமைச்சரும், பாஜகவும் பந்த் என்கிற பெயரில் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் வன்முறை வெறியாட்டங்களை நடத்தி வருகின்றனர் என்றும் விமர்சித்துள்ளார்.

இத்தகைய வன்முறையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வன்முறையாளர்களை கைது செய்வதுடன், பேருந்து இயக்கத்தை மேற்கொள்வதற்கு மாறாக, அதிகாரிகள் பேருந்துகளை நிறுத்தி வன்முறையாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதும், காவல்துறை வன்முறையாளர்களை கைது செய்யாமல் வேடிக்கை பார்ப்பதன் மூலம் பாஜகவின் வெறியாட்டத்திற்கு அதிமுக அரசு துணை போவதும் கண்டனத்திற்குரியதாகும் என்று கூறியுள்ள பாலகிருஷ்ணன்,

“மத்திய அமைச்சர் என்கிற பொறுப்புணர்வோடு செயல்பட்டு இனிமேலாவது தமிழக மக்களுக்கு உரிய நிவாரணங்களைப் பெற மத்திய அரசை வலியுறுத்தவும், மார்த்தாண்டம் மேம்பாலத்தை சரி செய்திடவுமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதே அவரது கடமையாகும்.மாறாக, தேவையற்ற பிரச்னைகளை கிளப்பி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் மத்திய அமைச்சரின் நடவடிக்கைகள் எதிர்விளைவுகளையே உருவாக்கும்” என்றும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share