புதுவை முதல்வர் – ஆளுநர் பேச்சுவார்த்தை ரத்து: காரணம் என்ன?

Published On:

| By Balaji

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் பொதுவெளியில் விவாதிக்க ஆளுநர் கிரண்பேடி எண்ணுவதால் நேற்றைய பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி 39 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த 13ஆம் தேதி முதல் ஆளுநர் மாளிகை எதிரில் தொடர் போராட்டத்தை நடத்திவருகிறார். டெல்லியிலிருந்து நேற்று சென்னை திரும்பிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நாராயணசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார். கிரண்பேடி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துக் கடிதம் அளித்துள்ளதை நாராயணசாமியும் உறுதிப்படுத்தினார். இதனையடுத்து ஆளுநரின் உத்தரவின்பேரில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களைத் தவிர போராட்ட இடத்திலிருந்து மற்றவர்களை வெளியேற்றும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

நேற்று மாலை 6 மணிக்குப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி பேச்சுவார்த்தை நடக்கவில்லை. பேச்சுவார்த்தை தொடர்பான சில நிபந்தனைகளை விதித்து கிரண்பேடிக்கு நாராயணசாமி கடிதம் அளித்திருந்தார். அந்த நிபந்தனைகளை கிரண்பேடி ஏற்க மறுத்துள்ளதால்தான் பேச்சுவார்த்தை ரத்தாகியுள்ளது. குறிப்பாக, “பேச்சுவார்த்தையில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருக்க வேண்டும், தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடக்க வேண்டும். கிரண்பேடியின் ஆலோசகர் அருள்நிதி தாஸ் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கக் கூடாது” போன்ற நிபந்தனைகளை நாராயணசாமி விதித்திருந்தார்.

இதையடுத்து கிரண்பேடி நாராயணசாமிக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “நீங்கள் நிபந்தனைகள் விதிக்கக் கூடாது. என்னுடைய ஆலோசகர் இல்லாமல் என்னால் பேச்சுவார்த்தை நடத்த இயலாது. 39 அம்ச கோரிக்கைகள் தொடர்பான கோப்புகளில் பல தீர்க்கப்பட்டுவிட்டன என்று செயலாளர்கள் கூறுகின்றனர். எந்தக் கோப்புகள் என்று நீங்கள் தெளிவாகத் தெரிவிக்கவில்லை. பொது வெளியிலேயே பேசுவதற்கு நான் தயார். இடம், தேதியை நீங்களே முடிவு செய்து ஆளுநர் மாளிகையில் தெரிவியுங்கள்” என்று பதிலளித்துள்ளார்.

இதனால் நேற்று நடைபெற வேண்டிய பேச்சுவார்த்தை ரத்தாகிவிட்டது. பொது வெளியில் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று கிரண்பேடி அறிவித்திருப்பதால் அது பேச்சுவார்த்தையாக இருக்குமா அல்லது விவாதமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 39 அம்ச கோரிக்கைக்கும் பொதுவெளியில் பதிலளிக்க தயாராக இருப்பதாகவும் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

பொது வெளியில் விவாதத்துக்கு முதல்வர் தயாரா என்ற ரீதியில் ஏற்கெனவே ட்விட்டரிலும், செய்தியாளர்கள் சந்திப்பிலும் கிரண்பேடி கேள்வியெழுப்பியிருந்தார். அதற்கு நாராயணசாமியும் சம்மதம் தெரிவித்திருந்தார். மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின்படி ரகசியக் காப்பு உறுதி எடுத்து பொறுப்பேற்ற துணைநிலை ஆளுநரும், முதல்வரும் இத்தகைய பேச்சுவார்த்தைகளை பொது வெளியில் நடத்தலாமா என்ற விவாதமும் தற்போது எழுந்துள்ளது. சுமுகத் தீர்வுக்கான பேச்சுவார்த்தை என்பதைவிட முதலமைச்சருக்கு துணைநிலை ஆளுநர் சவால் விடுத்துள்ளதாகவே இதைப் பார்க்க முடிகிறது.

புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு நேற்று மாலை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆதரவு தெரிவித்து சென்றதையடுத்து, நேற்று இரவு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் நேரில் ஆதரவு தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தப் போராட்டம் தொடராத வகையில், ஆட்சி நிர்வாகம் சிறப்பாகச் செயல்படக்கூடிய வகையில் விரைந்து மத்திய அரசு இதில் முடிவெடுக்க வேண்டும். முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த ஐந்து நாட்களுக்குப் பிறகும் உரிய நடவடிக்கையை எடுக்க கிரண்பேடி முயற்சி செய்யாதது அதிர்ச்சியளிக்கிறது. ஆட்சி நிர்வாகத்தை முடக்க அவர் எண்ணுகிறார் என்பது இதிலிருந்து புரிகிறது. இந்தப் போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது” என்றார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share