புதுச்சேரி: போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்!

Published On:

| By Balaji

<

கடந்த ஆறு நாட்களாக நடந்துவந்த புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று திரும்பப் பெறப்பட்டது.

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் 850க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு, மொத்தம் 156 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த 25ஆம் தேதியன்று, மூன்று மாத சம்பள நிலுவையை வழங்கக் கோரி, திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர் புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்கள். இந்த திடீர் அறிவிப்பினால், பொதுமக்கள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகத்தைச் சேர்ந்த பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் மூலமாக, புதுச்சேரி அரசுக்குத் தினமும் 13 லட்ச ரூபாய் இழப்பு ஏற்படுவதாகத் தெரிவித்தனர் தொழிற்சங்க நிர்வாகிகள்.

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்த நிலையில், கடந்த ஆறு நாட்களாக இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து வந்தது. அக்டோபர் 27ஆம் தேதியன்று, 2 மாத ஊதியம் இந்த மாதச் சம்பளத்துடன் வழங்கப்படும் என்று அறிவித்தார் புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர்.

இன்று (அக்டோபர் 31) புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு இரண்டு மாத நிலுவை ஊதியம் வழங்கப்பட்டது. இதனையடுத்து, புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share