மக்கள் நீதி மய்யத்தின் புதுவை மாநில செயற்குழு தலைவராக, திமுக மாநிலச் செயலாளராக இருந்த சுப்ரமணியத்தை கமல்ஹாசன் நியமித்துள்ளார்.
தமிழக அமைச்சர்களை தொடர்ந்து ட்விட்டரில் விமர்சித்து வந்த நடிகர் கமல்ஹாசன், ஒரு கட்டத்தில் அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி மதுரையில் மக்கள் நீதி மையத்தை ஆரம்பித்த அவர், தொடர்ச்சியாக அதனை வளர்த்தெடுக்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வப்போது கமல்ஹாசன் சுற்றுப்பயணமும் மேற்கொண்டுவருகிறார். வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்தகட்ட நகர்வாக கட்சியின் கிளையை புதுச்சேரியிலும் தொடங்கியுள்ளார் கமல்ஹாசன்.
சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் புதுச்சேரி கிளை தொடக்க விழா இன்று (ஜனவரி 30) நடைபெற்றது. கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், பொதுச் செயலாளர் அருணாசலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய கவிஞர் சினேகன், “புதுச்சேரி மாநிலத்தில் திமுக தொடங்குவதற்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவரான எம்.ஏ.சண்முகத்தின் புதல்வரும், மூன்று முறை எம்.எல்.ஏ.வாகவும், திமுகவில் மாநிலச் செயலாளராக 3 ஆண்டுகளாக பணியாற்றியவருமான சுப்பிரமணியம், மக்கள் நீதி மய்யத்தின் புதுச்சேரி மாநில செயற்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் செயற்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு புதுச்சேரியில் இன்று முதல்வர் மக்கள் நீதி மய்யம் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறது” என்ற அறிவிப்பை வாசித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், “தமிழகத்தின் மேம்பாட்டிற்காக அனைத்தையும் செய்துகொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் கிளையை புதுச்சேரியில் துவக்கி இருக்கிறோம். இந்நிகழ்வினால் எங்களுக்கு பெருமிதமும் பொறுப்பும் அதிகரித்திருக்கிறது. புதுவைக்கு தேவையான அனைத்து நல்ல செயல்பாடுகளை மக்கள் நீதி மய்யம் கட்சி முன்னெடுக்கும் என்று உறுதியளிக்கிறோம்” என்று தெரிவித்தார். மேலும், “மக்கள் நீதி மய்யத்தினர் எதிர்பார்ப்பதெல்லாம் மாற்றத்தையும் நேர்மையையும் மட்டுமே. புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் வருவதற்காக காத்திருக்கிறோம்” என்றும் தெரிவித்திருக்கிறார்.
�,