அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்காக அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியில் ஏ.சி.சண்முகம் தலைமையிலான புதிய நீதிக் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது என முடிவு செய்து என்று கடந்த 5ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஏ.சி.சண்முகம் கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிட்ட வேலூர் தொகுதியை கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதற்கிடையே எந்தக் கட்சிக்கு எந்த தொகுதியை ஒதுக்குவது என்பது குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக நேற்று ஆலோசனை நடத்தியது. கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வேலூரில் இன்று (மார்ச் 14) அமைச்சர் கே.சி.வீரமணி, ஏ.சி.சண்முகம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கே.சி.வீரமணி, “அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக்கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்பட இருக்கிறார். அண்ணன் ஏ.சி.சண்முகமே போட்டியிட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.
2014 மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட செங்குட்டுவன் 3,83,719 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் 3,24,326 வாக்குகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய நீதிக் கட்சியை எதிர்த்து திமுக சார்பில் வேலூர் தொகுதியில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.�,