புதிய தலைமைச் செயலக வழக்கு: இடைக்கால தடை நீட்டிப்பு!
புதிய தலைமைச் செயலகக் கட்டிட முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2006 – 11ஆம் ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பின், புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்ட புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் அனுப்பிய சம்மனை எதிர்த்து மறைந்த முதல்வர் கலைஞர், திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நீதிபதி ரகுபதி ஆணையத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதுடன், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களைப் பெற்று, அவற்றைப் பரிசீலித்து குற்ற நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டது.
ரகுபதி ஆணையம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வழக்கு மாற்றப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ் மற்றும் கல்யாணசுந்தரம் அமர்வு, புதிய தலைமைச் செயலக முறைகேடு தொடர்பான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு நேற்று (நவம்பர் 9) நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியபிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை வரும் 22ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர்.�,