இன்றைக்குப் புதிது புதிதாகக் கட்சி தொடங்குகிறார்கள், ஆனால் அவர்கள் இத்தனை நாட்கள் எங்கிருந்தார்கள்?” என்று கோவில்பட்டியில் நேற்று நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் ரூ.81.82 கோடி செலவில் அமைக்கப்பட்ட இரண்டாவது பைப்லைன் திட்டப் பணிகளை நேற்று (மே 11) நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 47.80கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ஜெயலலிதா என்னென்ன கனவுகள் கண்டாரோ அதை எல்லாம் தமிழக அரசு இன்றைக்கு நனவாக்கிக்கொண்டிருக்கிறது. இது மக்களுடைய அரசு, மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து செயல்படுகின்ற அரசு. ஆனால் இன்று பலர் புதிய புதிய கட்சிகளை எல்லாம் இங்கே துவக்கியுள்ளார்கள். புதிய கட்சிகள் துவங்குவது குறித்து வேறுபட்ட கருத்து எங்களுக்கு கிடையாது. ஆனால் இதுநாள் வரை என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.
“இன்றைக்கு நதிகள் எல்லாம் இணைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். காலம் போன காலத்தில் நதிகளை இணைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப் போராட்டத்தை நடத்தி, அது முடிகின்ற தறுவாயிலே இப்போது புதிதாக பல தலைவர்கள் முளைத்துச் சொல்லி கொண்டிருக்கிறார்கள்” என்று ரஜினியை விமர்சித்த முதல்வர், “நாட்டு மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய இயக்கம் அதிமுகதான். வேறு எந்தக் கட்சியும் கிடையாது” என்றும் உறுதிப்படத் தெரிவித்தார்.
தொடர்ந்து, “எதிர்க்கட்சிகள் எல்லாம் இன்று அரசின் மீது குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால் ஜெயலலிதாவின் அரசைப் பொறுத்தவரை இன்றைக்கு நேர்மையான அரசாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளைத் துல்லியமாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம். அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி பெற்றிருக்கிறோம்” என்றும் பேசினார்.�,”