‘புதிய இந்தியா என்பது டாக்டர் அம்பேத்கர் இந்தியாவாக இருக்கும்’ என்று பிரதமர் மோடி தனது மன் கீ பாத் உரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தூய்மை இந்தியா போல ஆரோக்கிய இந்தியாவும் முக்கியமான ஒன்று என்றும் பேசினார்.
மனதின் குரல் எனப் பொருள்தரும் ‘மன் கீ பாத்’ வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதைப் பிரதமர் மோடி வழக்கமாகக் கொண்டுள்ளார். மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை மன் கீ பாத் உரையை நிகழ்த்துவார். இந்த நிலையில் நேற்று (மார்ச் 25) உரையாற்றிய பிரதமர் மோடி, “ராம நவமி நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறி தன் உரையை ஆரம்பித்தார்.
“இளைஞர்களுக்காக ‘ஃபிட் இந்தியா’ என்ற இயக்கம் ஒன்றைத் தொடங்கலாம். அதற்கு ஏற்ற அளவுக்குத் தற்போது தேவை உள்ளது. நாட்டுக்கான உங்கள் உணர்வு, முழு தேசத்தின் மனநிலையையும் அது மாற்றிவிடும்” என்று குறிப்பிட்டார்.
“மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, ராம் மனோகர் லோகியா, சரண் சிங் ஆகியோர் விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் அளித்தனர். விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருளுக்குச் சரியான விலை கிடைப்பதை உறுதி செய்யும் முடிவு நடப்பு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ஒன்றரை மடங்கு கொடுக்க உள்ளோம்” என்றும் பிரதமர் தெரிவித்தார்.
தொடர்ந்து, “இந்த ஆண்டு மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. நான்காவது சர்வதேச யோகா தினத்துக்கு இன்னும் 100 நாள்களே உள்ளன. அதற்குள் அதிக மக்கள் யோகா செய்வதை ஊக்கப்படுத்த வேண்டும்” என்று கூறிய பிரதமர், “தூய்மையான இந்தியாவைப் போல், ஆரோக்கியமான இந்தியாவும் முக்கியம். மருத்துவ சேவைகள், குறைந்த விலையிலும் எளிதாகவும் கிடைக்க வேண்டும். ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 10 கோடி மக்கள் பயன்பெறுவார்கள். மூன்று மாவட்டங்களுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும்” என்றும் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய பிரதமர், அம்பேத்கர் குறித்து கூறுகையில், “டாக்டர் அம்பேத்கர் இந்தியாவைத் தொழிற்பூங்காவாக மாற்ற வேண்டும் என்று கனவு கண்டார். அவர் கனவை நிறைவேற்ற மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. புதிய இந்தியா என்பது டாக்டர் அம்பேத்கர் இந்தியாவாக இருக்கும். 1940களில் ஏராளமானோர் இரண்டாம் உலகப் போர் பற்றிப் பேசினர். ஆனால், அம்பேத்கர் மட்டும் ஒற்றுமை, கூட்டுறவு பற்றிப் பேசினார்” என்று பிரதமர் உரையாற்றினார்.�,