பீமா – கோரேகான் வன்முறையைத் தூண்டியதாக கைது செய்யப்பட்ட சமூகச் செயற்பாட்டாளர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸாருக்கு நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
மகாராஷ்டிராவின் புனேவில் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி பீமா – கோரேகான் போர் வெற்றியின் 200ஆவது ஆண்டு தினக் கொண்டாட்டத்தின்போது வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் ராகுல் ஃபெடங்கல் (28) என்ற இளைஞர் உயிரிழந்தார். ஐம்பதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக மும்பை முழுவதும் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது. இந்தக் கலவரம் தொடர்பான வழக்கில் புனே போலீஸார் டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவு அதிகாரிகளின் உதவியுடன் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ரோனா ஜேக்கப் என்பவரை டெல்லியில் கைது செய்தனர்.
இதேபோல், கடந்த ஜூன் 6ஆம் தேதி வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங், ஆங்கில பேராசிரியர் சோமா சென், எழுத்தாளர் சுதிர் தவாலே, வன உரிமை ஆர்வலர் மகேஷ் ரவுத், சிறைவாசிகள் உரிமை பாதுகாப்பு ஆர்வலர் ரோனா வில்சன் ஆகிய ஐவர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளனர் என்ற புகாரின் பேரில் கைது செய்யப்பட்டனர். இவர்களின் நீதிமன்றக் காவல் இன்றோடு (செப்டம்பர் 3) நிறைவடைகிறது. எனவே, நேற்று (செப்டம்பர் 2) கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் புனே சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் பீமா – கோரேகான் வன்முறை தூண்டுவதற்காக ரூ.5 லட்சம் பெற்றுள்ளனர் என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் உஜ்ஜிவாலா பவார் தெரிவித்தார். அண்மையில் கைது செய்யப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர்களான வெர்னான் கோன்சல்வீஸ், அருண் ஃபெர்ரீரா, கௌதம் நவ்லகா, சுதா பரத்வாஜ் மற்றும் கவிஞர் வரவர ராவ் ஆகியோருக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்பதை நிரூபிக்க போலீஸாருக்குக் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதேபோல், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று புனே போலீஸார் தரப்பில் நீதிமன்றத்தில் சனிக்கிழமையன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்ற, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கூடுதலாக 90 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது.�,