ஏப்ரல் 1ஆம் தேதிக்குப்பிறகு பி.எஸ். – 3 வாகனங்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்படுவது தொடர்பான வழக்கில், மத்திய அரசு உச்சநீதிமன்றத்திடம் இவ்வகை வாகனங்களை விற்பனை செய்வதற்கான தடையை எதிர்த்து வாதிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும்வகையில், பாரத் ஸ்டேஜ் 3 (பி.எஸ். – 3)தொழில்நுட்பத்தை பாரத் ஸ்டேஜ் 4 (பி.எஸ். – 4) தரத்துக்கு மாற்றம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் ஏப்ரல் மாதம் முதல் பாரத் ஸ்டேஜ் 3 தர வாகனங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தக் கட்டுப்பாடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில், பாரத் ஸ்டேஜ் 3 வாகன விற்பனையை இந்த மாதத்துடன் நிறுத்துவதுபற்றி உச்சநீதிமன்றம் முடிவெடுக்கவுள்ளது.
இந்த வழக்கில் மத்திய அரசு தனது வாதத்தில், மாசு கட்டுப்பாட்டை தடுக்க ஒரு நிலையிலிருந்து (ஸ்டேஜ்) அடுத்த நிலைக்கு மாறுவதற்கான கெடு உற்பத்திக்குத்தான் உள்ளது; விற்பனைக்கு இல்லை. தற்போது இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள், டிரக் உட்பட சுமார் 8.24 லட்சம் வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.12,000 கோடியாகும். இவற்றை அடுத்த நிலைக்கு மாற்ற முடியாது. இந்த விற்பனைக்குத் தடை விதித்தால் ஆட்டோமொபைல் துறை கடுமையாக பாதிக்கப்படும். எனவே, ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகும் இவற்றை விற்கவும், பதிவு செய்யவும் அனுமதிக்க வேண்டும் என வாதிட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தனது முடிவை இன்று அறிவிக்கவுள்ளது.
பி.எஸ். – 4 தர வாகனங்கள் தயாரிப்புச் செலவு அதிகரிக்கும் என்பதால், வாகனங்கள் விற்பனை விலையும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இரு சக்கர வாகனங்கள் விலை 20 சதவிகிதம் வரையில் அதிகரிக்கும் என்று ஆட்டோமொபைல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.�,