ஊட்டச்சத்துகளுக்காகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் முட்டையை அனைவரும் உண்ணத் தொடங்கியுள்ளனர். ஆனால் சில மாதங்களுக்குமுன் பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை மற்றும் முட்டைகோஸ் உள்ளிட்டவை தயாரிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தின.
கடந்த ஏப்ரல் மாதம் , சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் முட்டை மற்றும் காய்கறிகள் இந்தியாவில் அதிகளவு விற்பனை செய்யப்படுவதாக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் சந்த் ஜெயின் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், ‘சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் முட்டை மற்றும் காய்கறிகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, பெருநகரங்களில்தான் கலப்பட பொருட்களின் புழக்கம் அதிகளவில் உள்ளன. எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து பொருட்களின் தரத்தைக் கண்டறிய வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுமீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி அனு மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஏப்ரல் 28 ஆம் தேதி வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிளாஸ்டிக் முட்டை மற்றும் காய்கறிகள் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்த மனுமீதான அடுத்த விசாரணை ஜூலை 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக பிளாஸ்டிக் முட்டை பிளாஸ்டிக் அரிசி விற்பனை தமிழகத்தில் அதிகரித்துள்ளதாகப் புகார் எழுந்து வருகிறது. தமிழகத்தில் பிளாஸ்டிக்கால் ஆன உணவுப் பொருள்கள் புழக்கத்தில் இல்லை எனத் தமிழக அரசும் உறுதியளித்து வருகிறது.
இந்நிலையில், திரையரங்கில் பிளாஸ்டிக் முட்டை பப்ஸ் சாப்பிட்ட இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூரைச் சேர்ந்த அஜித், சூர்யா என்னும் இளைஞர்கள் மணவாளன் நகரில் உள்ள திரையரங்குக்கு படம் பார்க்க சென்றுள்ளனர். படத்தின் இடைவேளையில், கேன்டீனில்,முட்டை பப்ஸ் வாங்கிச் சாப்பிட்ட இருவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, படம் பார்க்க வந்தவர்கள், தியேட்டர் நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பாதிக்கப்பட்ட இருவரையும் திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுபோன்ற பிளாஸ்டிக் முட்டைகள் கோழி முட்டைகளுடன் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. முட்டையில் உள்ள வெள்ளைக் கருவுக்கு பதில் ஸ்டார்ச், ரெசின், சோடியம், ஆல்கனேட் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மஞ்சள் கருவுக்கு பதில் ஆர்கானிக் அமிலம், பொட்டாசியம், ஜெலட்டின், கால்சியம் குளோரைடு, பென்சாயிக் அமிலம் பயன்படுத்தப்படுகின்றன. முட்டையின் நிறத்தைப் பெற செயற்கை நிறங்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் உண்மையான முட்டையையும் போலி முட்டையையும் பொதுமக்கள் கண்டுபிடிக்க முடியாதவாறு, முட்டையின் ஓடு அச்சுகள் மூலம் தயாரித்து, அதன் மீது கோழியின் கழிவுகளைப் பூசி விற்பனை செய்கின்றனர்.
**பிளாஸ்டிக் முட்டைகளைக் கண்டறிவது எப்படி?**
சாதாரண முட்டையை விடவும் பிளாஸ்டிக் முட்டைப் பளபளப்பாக இருக்கும். பிளாஸ்டிக் முட்டையின் ஓட்டினை கையால் தொடும் போது, சற்று கரடுமுரடானதாக இருக்கும். பிளாஸ்டிக் முட்டைகளைக் குலுக்கும் போது, சத்தமொன்றினைக் கேட்க முடியும். சாதாரண முட்டையை மெதுவாகத் தட்டும் போது எழும் சத்தம், பிளாஸ்டிக் முட்டையிலிருந்து எழும் சத்தத்தினை விடவும் அதிகமாக இருக்கும். பிளாஸ்டிக் முட்டைகளை உடைத்துப் பல நாட்கள் வைத்திருந்தாலும் துர்நாற்றம் வீசாது. மேலும், மஞ்சள் கரு கொஞ்சம்கூட சிதறாமல் பந்துபோல் இருக்கும்.
**பிளாஸ்டிக் அரிசியைக் கண்டறிவது எப்படி?**
சிறிதளவு அரிசியை எடுத்து அதைத் தீயிட்டு கொளுத்துங்கள். அப்போது பிளாஸ்டிக் வாசனை வந்தால் அது பிளாஸ்டிக் அரிசி. பொதுவாக சாதம் 1 நாளுக்குப் பிறகு கெட்டுப் போய் விடும். ஆனால், பிளாஸ்டிக் அரிசியால் வடித்த சாதம் 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். சூடான எண்ணெய்யை அரிசியின் மீது ஊற்றும் போது உருகினால் அது பிளாஸ்டிக் அரிசி. அரிசியை நீரில் ஊற வைக்கும்போது மிதந்தால் அது பிளாஸ்டிக் அரிசி. அதேபோல், பிளாஸ்டிக் அரிசியால் வடித்த சாதம் கையில் ஒட்டாது. அதைப் பந்துபோல் உருட்டி தரையில் போட்டால் மேலெழும்பும்.
தமிழகத்தில், பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி, பால் என மக்களின் உயிர் நாடியான உணவில் கலப்படம் செய்யப்படுவது அவர்களின் உயிரின் மதிப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.�,