பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு பிரச்சாரத்தின் துவக்கமாக அதற்கான இலச்சினை, வலைதளம் செயலி ஆகியவற்றை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஆகஸ்ட் 23) அறிமுகம் செய்து வைத்தார்.
தமிழகத்தில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ஆம் தேதி, சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986ன் கீழ், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை கண்காணிக்கும் வகையிலும், இது தொடர்பாக அரசுத் துறைகளால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கும், தமிழ்நாட்டை சென்னை, சேலம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் மதுரை என ஆறு மண்டலங்களாக பிரித்து, மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் மண்டல ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களை பயன்படுத்துவது குறித்த பயிலரங்குகள் அனைத்து மண்டலங்களிலும் நடத்துவதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு 54 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது.
இந்நிலையில், பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு பிரச்சாரத்தினை துவக்கி வைக்கும் விதமாக, அதற்கான இலச்சினை, [இணையப்பக்கம்]( http://www.plasticpollutionfreetn.org/) மற்றும் Plastic pollution Free Tamil Nadu என்ற கைப்பேசி செயலியையும் தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 23) அறிமுகப்படுத்தினார்.
பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு பிரச்சாரத்தின் விளம்பர தூதுவராக நடிகர் விவேக் நியமிக்கப்பட்டுள்ளார். விவேக்கிற்கு துணிப் பை மற்றும் சணல் பைகளை வழங்கி பிரச்சாரத்தை துவக்கி வைத்த முதல்வர், பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்ப்பது மற்றும் மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்திடும் வகையில் தயாரிக்கப்பட்ட குறும்படங்களையும் வெளியிட்டார்.
மேலும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பாக்குமட்டையில் தட்டு, கோப்பை போன்ற பொருட்களை தயாரிக்கும் தொழில் முனைவோர்களுக்கு தொழில் வணிகத் துறை மூலமாக மானியத்துடன் கூடிய கடனுதவிக்கான 21 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கான வங்கி வரைவோலைகளை 5 தொழில் முனைவோர்களுக்கு முதல்வர் வழங்கினார்.
பிளாஸ்டிக்கை தடை செய்வதற்கு விளம்பரத் தூதுவராக விவேக்குடன் நடிகர்கள் சூர்யா, கார்த்திக், நடிகை ஜோதிகா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் குறிப்பிட்டார்.
இனி தன்னிடம் வரும் அரசு கோப்புகளிலுள்ள மேலுறைகளில் கூட காகிதத்தினாலான ஃபோல்டர்களையே பயன்படுத்தப் போவதாக தெரிவித்த முதல்வர், அமைச்சர்களும் அதையே பயன்படுத்துவார்கள் என்று கூறினார்.
�,