பிளாஸ்டிக்குக்குத் தடை: தொழில்துறைகளுக்கு நெருக்கடி!

Published On:

| By Balaji

சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குக்கு நாடு முழுவதும் தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. பொருளாதார மந்தநிலை மற்றும் வேலை இழப்புகளைச் சந்தித்து வரும் இந்த நேரத்தில் இது தொழில்துறைக்கு மிகவும் இடையூறாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

2022இல் இந்தியாவை பிளாஸ்டிக் இல்லா நாடாக மாற்ற, முதற்கட்டமாக ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்குக்கு மகாத்மா காந்தி (அக்டோபர் 2) பிறந்தநாள் முதல் தடை விதிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எரியும் பிளாஸ்டிக்குக்கு விரைவில் மத்திய அரசு தரப்பிலிருந்து தடை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் பிளாஸ்டிக் பைகள், கப், தட்டுகள், சிறிய பாட்டில்கள், ஸ்ட்ரா உள்ளிட்ட பொருட்களுக்கு உடனடி தடையில்லை. அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உயரதிகாரியான சந்திரா கிஷோர் மிஸ்ரா, ராய்ட்டர்ஸிடம் கூறுகையில், “இப்போதைக்கு, பாலிதீன் பைகள் போன்ற சில ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களைச் சேமித்தல், உற்பத்தி செய்தல் மற்றும் பயன்படுத்துவதற்கு எதிராக விதிகளை அமல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்படும். ஆனால், புதிய தடை உத்தரவு எதுவும் தற்போது வெளியிடப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

அரசின் இந்த தடை முடிவால் சோடா, ஷாம்பூ, கெட்சப் உட்படப் பல பொருட்களையும் பிளாஸ்டிக்கால் பேக்கிங் செய்யும் நுகர்வோர் நிறுவனங்கள் கலக்கமடைந்திருக்கின்றன.

இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பான லாபி குழு, இந்த நடவடிக்கை பல பொருளாதார துறைகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக, சுகாதார தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் சிறிய அளவிலான பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. பல அடுக்கு பேக்கேஜிங் என்று அழைக்கப்படும் சாச்செட்டுகளையும் தடை செய்யக்கூடாது, ஏனெனில் இது பிஸ்கட், உப்பு மற்றும் பால் போன்ற பொருட்களின் விநியோகத்தைச் சீர்குலைக்கும் என்று லாபி குழு குறிப்பிட்டுள்ளது.

ஆண்டுதோறும் சுமார் 14 மில்லியன் டன் பிளாஸ்டிக் பயன்படுத்தும் இந்தியாவில், பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிப்பதற்கான ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பு இல்லாததால், பிளாஸ்டிக் கழிவுகள் குப்பைகளில் தூக்கி வீச வழிவகுக்கிறது.

“இந்த பிளாஸ்டிக் பொருட்களில் சிலவற்றில் உள்ள நச்சுகள் மற்றும் தொடர்ச்சியான மாசுபாடுகள் மனித உயிர்களுக்கு கேடு விளைவிக்கின்றன. புற்றுநோய் உட்பட பல நோய்களை ஏற்படுத்துகின்றன” என்று டெல்லியைச் சேர்ந்த சிந்தான் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் செயல் குழுவின் தலைவர் சித்ரா முகர்ஜி கூறியுள்ளார்.

ஒருமுறை பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்படும் என்ற அரசு அறிவிப்புக்கு முன்னதாகவே கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பல உணவகங்களில் வாழையிலை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அங்குள்ள உணவகங்கள் உணவுகளை வாழையிலையில் பரிமாறுவது மட்டுமின்றி, பார்சலும் வாழையிலைகளிலேயே செய்து தருகின்றன. இது அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்திலும் ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக்குக்கு அரசு தடை விதித்த நிலையில் பெரும்பாலான உணவகங்கள் வாழையிலைக்கு மாறியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share