திரைப்படங்கள் வாயிலாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் பேசும் பா.இரஞ்சித் தற்போது பாலிவுட்டிலும் இயக்குநராக அறிமுகமாகிறார்.
பிர்ஸா முண்டா என்ற பழங்குடி இனத் தலைவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பா.இரஞ்சித் தனது அடுத்த படத்தை இந்தியில் இயக்குகிறார். அதே முயற்சியில் இயக்குநர் கோபி நயினாரும் இறங்கியுள்ளார்.
ஆங்கிலேயர்கள், ஜமீன்தார்கள் ஆகிய இருதரப்பிடமும் தங்கள் பாரம்பரிய நிலத்தை இழந்து, அடிமைப்பட்டிருந்த பழங்குடி மக்களை மீட்பதற்காகப் சிறுவயது முதலே போராடியவர் பிர்ஸா முண்டா. 1890களில் பிரிட்டிஷ் இந்தியாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டபோது காட்டில் பயிரிடும் உரிமைக்கான வரி நிலுவையைத் தள்ளுபடி செய்யக் கோரி பெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை 1894 அக்டோபர் 1ஆம் தேதி பிர்ஸா முண்டா நடத்தினார். தங்கள் போராட்டக்குரல் அதிகாரவர்க்கத்தால் அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில் ஆயுதம் ஏந்தி போராடினார். ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராகப் போராட பழங்குடிகளைத் திரட்டிக் கொரில்லா படையை பிர்ஸா முண்டா உருவாக்கினார். 1900ஆம் ஆண்டு ஆங்கிலேயப் படையால் கைது செய்யப்பட்டு, அதே ஆண்டு சிறையில் தனது 25ஆவது வயதில் இறந்தார்.
பழங்குடித் தலைவரான பிர்ஸா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே இரஞ்சித்தும், கோபி நயினாரும் படம் இயக்குவது தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஏனெனில் மெட்ராஸ் திரைப்படம், கருப்பர் நகரம் படத்தின் கதைக் களத்தை ஒத்திருப்பதாக ஏற்கெனவே சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.
இயக்குநர் இரஞ்சித் தி நியூஸ் மினிட் நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் பிர்ஸா முண்டா பயோ பிக் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். “இந்த படத்திற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது. இன்னும் படத்தில் நடிக்கும் நடிகர்களை இறுதிசெய்யவில்லை. பியாண்ட் கிளவுட்ஸ் படத்தை இயக்கிய நமா பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.
தமிழில் இருந்து இந்தி செல்வதற்கான காரணம் என்ன, பெரிய அளவிலான பார்வையாளர்களை ஈர்ப்பதற்காகவா என்ற கேள்விக்கு பதிலளித்த ரஞ்சித், “இது முக்கியமான படமாக இருக்கும் என நம்புகிறேன். சினிமா மொழிகளுக்கு அப்பாற்பட்டது. இது ஒரு காட்சி ஊடகம். தி பேட்டல் ஆஃப் அல்ஜியர்ஸ் என்ற படத்தை பார்த்த பின்தான் நான் சினிமாவுக்குள் நுழைய வேண்டும் என்று முடிவு செய்தேன். எனது படங்கள் நாடு கடந்து செல்கின்றன. ஆனால் இதுபோன்ற கதையை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல இந்தி சரியான தேர்வாக இருக்கும்” என்று கூறினார்.
கோபி நயினாரை நாம் தொடர்பு கொண்டு பிர்ஸா முண்டா பயோபிக் குறித்து கேட்ட போது, “ஆம், நான் பிர்ஸா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்கவுள்ளேன். வாழ்க்கை வரலாற்றை யார் வேண்டுமானாலும் இயக்கலாம். ஹிட்லரைப் பற்றி, இயேசுவைப் பற்றி பல படங்கள் வந்துள்ளன. பிர்ஸா முண்டாவைப் பற்றி படம் எடுப்பது எனது விருப்பம், உரிமை என்பது போல் அவருக்கும் அந்த உரிமை இருக்கிறது. இது ஜனநாயகம். இது தெரியாமல் சிலர் இதை விவாதமாக்குகிறார்கள். இதனால்தான் நான் இப்போது அறம் 2 இயக்குகிறேன். இதை முடித்தபின் அந்த படத்தை இயக்குவேன்” என்று கூறினார்.�,