பிரேக் பிடிக்காத மணல் லாரி : பதறவைக்கும் காட்சிகள்!

Published On:

| By Balaji

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பிரேக் பிடிக்காமல் வேகமாக வந்த டிப்பர் லாரி கார் மீது மோதி இழுத்துச் செல்லும் பதறவைக்கும் வீடியோகாட்சிகள் வெளியாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த ராமசந்திரன் என்னும் லாரி ஓட்டுநர், செப்டம்பர் 9 ஆம் தேதி இரவு, கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அரசமங்கலம் பகுதியில், தென்பெண்ணை ஆற்றிலிருந்து மணல் எடுத்துக் கொண்டு அங்குச்செட்டிபாளையம் மணல் கிடங்கிற்கு டிப்பர் லாரியில் சென்றுகொண்டிருந்தார். அவர் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகேயுள்ள நான்குமுனை சந்திப்பில் வரும்பொழுது லாரி அதன் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது.

பிரேக் பிடிக்காத லாரியை நிறுத்த ராமசந்திரன் முயற்சித்தும் இயலாமல் போனது. இந்த நிலையில் விழுப்புரத்தில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்துகொண்டிருந்த காரின் மீது லாரி மோதியது. தொடர்ந்து சிறிது தூரத்திற்கு பிரேக் பிடிக்காத அந்த லாரி காரை இழுத்துச் சென்றது.

இந்த சம்பவத்தில் காரில் இருந்தவர்களுக்கு பெரிய அளவிலான காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் இருசக்கர வாகனம் மற்றும் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதியதில் பண்ருட்டியை அடுத்த தட்டாம்பாளையம் ஊரைச் சேர்ந்த 65 வயதாகும் ரங்கநாதன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தில் பண்ருட்டி பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், திராசு பகுதியைச் சேர்ந்த பரமானந்தம், திருவதிகையைச் சேர்ந்த சிவகுமார், ஓரையூரைச் சேர்ந்த ராஜீவ்காந்தி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல்கட்ட சிகிச்சைக்காக அவர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கும் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் நடைபெற்றபோது பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் ராஜதீபன் நூலிழையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். காவல்துறையினரால் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில் இடம்பெற்ற காட்சிகள் பார்ப்பவர்களை பதற வைக்கும் விதத்தில் உள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel