}பிரியங்கா போட்டியில்லை: பிரச்சாரத்தில் கவனம்!

Published On:

| By Balaji

பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், பிரச்சாரத்தில் மட்டுமே முழு கவனம் செலுத்தப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தனை ஆண்டுகளாக அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடாமலேயே இருந்து வந்த பிரியங்கா காந்தி அண்மையில் தீவிர அரசியலில் ஈடுபடத் துவங்கினார். காங்கிரஸ் கட்சியில் உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதி பொதுச் செயலாளராகவும் பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேற்று (மார்ச் 12) குஜராத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு தனது முதல் அரசியல் பிரச்சாரப் பேச்சை தொடங்கினார். அரசியல் செயல்பாடுகளில் பிரியங்கா காந்தி ஈடுபடத் தொடங்கியதும், அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று பேச்சுக்கள் எழுந்தன.

இந்நிலையில் பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவர் இதுகுறித்து *என்.டி.டி.வி.* ஊடகத்திடம் பேசுகையில், “பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள பிரியங்கா காந்தி பிரச்சாரத்தில் மட்டுமே கவனம் செலுத்தவுள்ளார். அவருடைய அம்மாவுக்கும், சகோதாரருக்கும் அமேதி மற்றும் ரேபரேலியில் பிரச்சாரத்துக்கு உதவுவார். அதேபோல நாடு முழுவதும் உள்ள மற்ற காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கும் பிரியங்கா பிரச்சாரம் செய்வார்” என்றார்.

இதன்படி பிரயாக்ராஜ் முதல் வாரணாசி வரையிலான தனது பிரச்சாரத்தை பிரியங்கா காந்தி நாளை தொடங்குகிறார். பிரயாக்ராஜில்தான் இவருடைய கொள்ளு தாத்தாவும், இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேரு பிறந்தார். அங்குள்ள நேருவின் நினைவகத்துக்கும், காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் பிரியங்கா காந்தி செல்கிறார். 100 கிலோ மீட்டர் பயணத்தின் நிறைவாக மோடியின் தொகுதியான வாரணாசியில் பிரச்சாரத்தை முடிக்கிறார்.

ராகுல் காந்தி, சோனியா காந்தி போட்டியிடுவது உறுதியான நிலையில் பிரியங்கா காந்தி எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்பது அனைவரிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி அறிவித்த 15 வேட்பாளர்கள் பட்டியலிலும் பிரியங்கா காந்தியின் பெயர் இல்லை. இந்நிலையில் பிரியங்கா காந்தி போட்டியிடப்போவதில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share