மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தியால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பரப்புரையை தொடங்க ஆயத்தமாகி வருகின்றன. ஏப்ரல் 11, ஏப்ரல் 18, ஏப்ரல் 23, ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19 என ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. மே 23 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஏழு கட்டங்களிலுமே தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய இரு முக்கிய கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக அண்மையில் பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். இந்நிலையில், பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசத்தால் தேர்தலில் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து யோகி ஆதித்யநாத் *பிடிஐ* செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “இந்த முறை பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அது காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விவகாரம். இதற்கு முன்பும் காங்கிரஸ் கட்சிக்காக பிரியங்கா காந்தி பரப்புரை மேற்கொண்டுள்ளார். இந்த முறையும் அவரால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது” என்று தெரிவித்தார். சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி குறித்து ஆதித்யநாத்திடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், “புதிதாக முளைத்துள்ள கூட்டணி ஏற்கெனவே பல பிரச்சினைகளில் சிக்கியுள்ளது. அந்தக் கூட்டணி குறித்து எழுப்பப்படும் எச்சரிக்கைகள் எல்லாம் தவறானவை” என்று பதிலளித்தார்.�,