பிரஷாந்த் கிஷோருக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் திமுக பணம் கொடுத்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம், வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் இணைந்து பணியாற்றவுள்ளது. இதனை சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின். அவர் தனது முகநூல் பக்கத்தில், “தமிழகம் இழந்த புகழை மீட்கும் நம் குறிக்கோள் வெற்றி பெறவும், அதற்கான திட்டமிடலில் உதவிடவும், திறமைமிக்க, ஒத்த கருத்துடைய பல தமிழக இளைஞர்கள், IPAC – அமைப்பின் கீழ், நம்முடன் 2021 தேர்தலில் இணைந்து பணியாற்றிட இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 5) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம், டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “இதுதொடர்பாக நான் பலமுறை விளக்கம் அளித்துவிட்டேன். கேள்வித் தாள், விடைத்தாள், தேர்வு மையங்கள் அமைப்பது என டிஎன்பிஎஸ்சி தனது கடமையை சிறப்பாக செய்துள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் பலரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். எந்தவித உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் விசாரணைக்கு உட்பட்டவர்கள்தான். தவறு செய்தால் தண்டனை நிச்சயம் உண்டு. 6,300 தேர்வு மையங்களில் 16 லட்சம் பேர் எழுதிய தேர்வு இது. ஒரு மாவட்டத்தில் உள்ள இரண்டு மையங்களில் நடந்த விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகள் இதனை ஊதிப் பெரிதாக்குகிறார்கள்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, “குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தனது மகனை தலைவராக முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக, உதயநிதியை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பிரஷாந்த் கிஷோர் பொறுப்பேற்ற உடனேயே திமுக கார்பரேட் கட்சியாகிவிட்டது. கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கு மேல் பிரஷாந்த் கிஷோருக்கு அளித்து, அவர்களிடம் ஆலோசனை வாங்கி திமுக செயல்படுகிறது. திமுகவுக்கு இனி திராவிட கொள்கையும், பெரியார் கொள்கையும் கிடையாது” என்றும் திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.�,