‘குக்கூ’ புகழ் மாளவிகா நாயர், பிரமாண்டமாக உருவாகும் புதிய படத்தில் தற்போது நடிக்கவுள்ளார்.
மறைந்த தெலுங்கு நடிகரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமா ராவின் வாழ்க்கைக் கதையைத் தழுவி என்டிஆர் கதாநாயகுடு, என்டிஆர் மகாநாயகுடு எனும் பயோபிக் படங்கள் இரண்டு பாகமாக வெளிவரவுள்ளது. அதன்படி அரசியலை மையமாக வைத்து ஒன்றும், சினிமாவை மையமாக வைத்து ஒன்றும் என உருவாகிவருகிறது.
இதில் என்டிஆராக அவரது மகனான பாலகிருஷ்ணாவே நடிக்க, நடிகை வித்யா பாலன், நடிகர் ராணா, நடிகை மஞ்சிமா மோகன் உள்ளிட்டோரும் இதில் நடிக்கின்றனர். இதுபோக சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிகை நித்யா மேனனும், ஸ்ரீதேவி ரோலில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் நடிக்கின்றனர். இயக்குநர் க்ரிஷ் இதை இயக்கும் நிலையில் எம்.எம்.கீரவாணி இதற்கு இசையமைக்கிறார்.
விறுவிறுப்பாக இதன் பணிகள் நடந்துவரும் நிலையில் இந்தப் படத்தில் தற்போது புதிதாக இணையவுள்ளார் நடிகை மாளவிகா நாயர். ராஜுமுருகன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷுடன் இணைந்து, ‘குக்கூ’ எனும் படத்தில் ‘சுதந்திரக்கொடி’ எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் வாயிலாக கோலிவுட்டில் அறிமுகமாகி கவனம்பெற்ற மாளவிகா நாயர், இப்படத்தில் நடிகை கிருஷ்ண குமாரியின் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து மாளவிகா நாயர் நடித்துள்ள டாக்ஸிவாலா திரைப்படம் இன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.�,