ஐ.நாவில் பிரதமர் பேசியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஐ.நா சபையில் நேற்று முன்தினம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கனியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற புறநானூற்றுப் பாடலை மேற்கோள்காட்டி பேசினார். “3000 வருடங்களுக்கு முன்பாக இந்தியாவில் வாழ்ந்த சிறந்த புலவர் கணியன் பூங்குன்றனார், உலகின் தொன்மையான தமிழ் மொழியில், ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று பாடியுள்ளார். இதன் அர்த்தம், எங்களுக்கு அனைத்து இடமும் சொந்தம். அனைவருமே எங்கள் உறவினர் என்பது. இதுதான் இந்தியாவின் தனித்தன்மை” என்று பிரதமர் பேசியிருந்தார். இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று (செப்டம்பர் 28) செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கனியன் பூங்குன்றனாரின் வாசகங்களைப் பிரதமர் மோடி ஐ.நா சபையில் கூறியுள்ளதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். தமிழும், தமிழ் சார்ந்த தத்துவங்களும் உலகத்தில் என்றென்றும் நிலைநிற்கக் கூடியது. மோடி சொன்னதற்கு என்னுடைய பாராட்டுகள். வாய்வார்த்தையாக மட்டும் இல்லாமல் பிரதமரின் செயலிலும் அது இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
ஆனாலும் பிரதமரின் செயலில் அது இல்லை எனத் தெரிவித்த அழகிரி, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தத்துவத்துக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்ஸும் பாஜகவும் செயல்படுவதாகவும், பிரதமர் சொன்னது ஒன்று, செய்வது வேறொன்றாக உள்ளதாகவும் அழகிரி குற்றம்சாட்டினார்.
குமரி அனந்தன் வேட்பாளராக அறிவிக்கப்படாதது தொடர்பாகப் பேசியவர், “இன்றைக்கும் அந்த தொகுதியின் எம்.எல்.ஏ, எங்களின் வேட்பாளர் குமரி அனந்தன்தான். அவருக்குத்தான் அனைத்து தகுதிகளும் உள்ளன. அவருடைய பெயரைத்தான் முதலில் எழுதிக்கொடுத்தோம். சோனியா காந்தியிடம் நானே இதுதொடர்பாக கூறினேன். அவர்தான், ‘குமரி அனந்தனை எனக்கு நன்றாகத் தெரியும். நான் அவரிடம் இதுதொடர்பாகப் பேசுகிறேன். குமரி அனந்தனின் ஆசியுடன் ரூபி மனோகரன் போட்டியிடட்டும்’ எனக் கூறினார். இதுதொடர்பாக நாங்கள் அவரிடம் பேசவுள்ளோம்” என்று தெரிவித்தார்.�,