பள்ளிக்கரணை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண விழா பேனர் விழுந்ததில் விபத்து ஏற்பட்டு சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ உயிரிழந்தார். இதனையடுத்து, இனி விளம்பர பேனர்கள் வைக்க வேண்டாம் என்று தத்தமது கட்சித் தொண்டர்களுக்கு அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் அறிவுறுத்தின.
இந்த சூழலில் இந்தியா-சீனா இடையேயான முறைசாரா உச்சி மாநாடு வரும் 12, 13 தேதிகளில் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்க வரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை வரவேற்று பேனர் வைக்க தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் அனுமதி கேட்கப்பட்டிருக்கிறது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இன்று (அக்டோபர் 2) செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “பிரதமர் மோடியையும், சீன அதிபரையும் வரவேற்க எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. ஆனால் பேனர் வைக்க வேண்டும் என்று தமிழக அரசு கோர்ட்டில் அனுமதி கேட்டுள்ளது தவறான முன்னுதாரணம், சட்டத்தை வளைக்க அரசே முன்னுதாரணமாக இருப்பது வேதனை அளிக்கிறது. வரவேற்பதற்கு பத்திரிகை, ஊடகங்கள், தனியார் சுவர்கள் ஆகியவற்றை பயன்படுத்தலாம். அதை பார்த்தே மோடியும், சீன அதிபரும் புரிந்து கொள்வார்கள். சீனாவில் போஸ்டர், பேனர் கலாசாரம் கிடையாது. அவர்களிடமும் புதிய கலாச்சாரத்தை புகுத்த வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து, கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “தமிழகமும், தமிழர்களும் சுபஸ்ரீயின் இழப்பில் இருந்தே இன்னும் மீளவில்லை. இந்த நிலையில் உங்கள் வருகைக்கு பேனர்கள் வைக்க அரசு நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளது. இந்த இடையூறு பேனர் கலச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க பிரதமரான நீங்கள் ஒரு முன்னோடியாக திகழ வேண்டும்” என்று குறிப்பிட்டவர்,
“இது தமிழர்களின் உணர்வை நீங்கள் பிரதிபலிப்பதாக அமையும். பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் பிரதமரே. அதுவே உங்களுக்கு பெரிய விளம்பரமாக இருக்கும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுபோலவே புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர், “பேனர் வைக்கக் கூடாது என்று அதிமுக அறிக்கை வெளியிட்டது. ஆனால், பிரதமர் மோடி வருகையின்போது பேனர் வைக்க அனுமதி கோரியுள்ளது. மோடி வருகையின்போது பேனரால் உயிர்ச்சேதம் ஏற்பட்டால் யார் பொறுப்பு?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.�,