பிரசாத் ஸ்டூடியோவுக்கு எதிராக இளையராஜா புகார்!

Published On:

| By Balaji

�இசையமைப்பாளர் இளையராஜா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் கடந்த 40 ஆண்டுகளாக ஒலிப்பதிவுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த அறையை அவர் வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தி வருவதாகவும், இசையமைப்புக்காக இளையராஜா பயன்படுத்தும் கருவிகள் அனைத்தும் அங்குதான் வைக்கப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஒலிப்பதிவுக் கூடத்தை நடத்த பிரசாத் ஸ்டூடியோவின் நிறுவனர் எல்.வி.பிரசாத், இளையராஜாவுக்கு அனுமதி வழங்கியுள்ளார். தற்போது பிரசாத் ஸ்டூடியோவின் இயக்குநராக இருந்து அதை நிர்வகித்து வருபவர் எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத்.

இந்த நிலையில் பிரசாத் ஸ்டூடியோவுக்கு எதிராக இளையராஜா தரப்பிலிருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “இளையராஜா இசையமைக்கும் பகுதியான ஸ்டூடியோ-1இல் சில மேசைகளைப் போட்டு சுமார் 20 கணினிகளை வைத்து வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது இசையமைப்புப் பணிக்கு இடையூறாக உள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ஸ்டூடியோவை அத்துமீறிப் பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறாகக் கணினிகள் வைக்கப்பட்டுள்ளதால் அங்கு இருக்கும் இசைக்கருவிகள் சேதமாக வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரசாத் ஸ்டூடியோ இயக்குநர் சாய் பிரசாத் மற்றும் ஊழியர்கள் பாஸ்கர் மற்றும் சிவராமன் ஆகியோர் மீது எதிராக இளையராஜாவின் உதவியாளர் கஃபார் தபால் மூலம் இந்த புகாரை அளித்துள்ளார். இதைப் பெற்றுக்கொண்ட விருகம்பாக்கம் காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share