தமிழகத்தில் பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்கள் தங்களது பிரசவத்துக்குத் தனியார் மருத்துவமனைகளையே அதிகமாக நாடிச் செல்கின்றனர். பிரசவச் செலவுகள் அரசு மருத்துவமனைகளைக் காட்டிலும் இங்கு 13 மடங்கு கூடுதலாக வசூலிப்பதும், தேசிய அளவில் பிரசவத்துக்கு ஆகும் செலவானது தமிழகத்திலுள்ள தனியார் மருத்துவமனைகளில் 70 சதவிகிதம் கூடுதலாக இருப்பதும் ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
USAID India மற்றும் Public Health Foundation of India ஆகிய இரு நிறுவனங்களும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்திடம் விவரங்களைப் பெற்று மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. பிரசவத்துக்காகத் தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் ஒரு பெண், ரூ.32,000 மருத்துவக் கட்டணமாகச் செலுத்துகிறார். ஆனால், தேசிய அளவில் அத்தொகை ரூ.18,000 ஆக உள்ளது. மேலும், அரசு வசதிகளில் அது ரூ.2,500 மட்டுமே உள்ளது.
தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கையின்படி (2015-16), தமிழகத்தில் நடைபெறும் பிரசவங்களில் சுமார் 34.1 சதவிகிதம் சி – பிரிவுகளிலேயே நடைபெறுகின்றன. தனியார் மருத்துவமனைகளில் பாதிக்கும் மேற்பட்ட பிரசவங்கள் அறுவைசிகிச்சைகள் மூலமாகவே நடைபெறுகின்றன. ஆனால், அரசு மருத்துவமனைகளில் அது 26 சதவிகிதமாக மட்டுமே உள்ளது.
சென்னை ஐ.ஐ.டி-யைச் சேர்ந்த பொருளாதார ஆய்வாளரும் இந்த ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவருமான வி.ஆர்.முரளீதரன் கூறுகையில், “தனியார் மருத்துவமனைகளுக்கு வசதிபடைத்தவர்கள் மட்டுமே செல்கின்றனர் என்ற தவறான கருத்து உள்ளது. ஆனால், உண்மையில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைகளும் சேவைகளும் மிகச் சிறப்பாக உள்ளது என்று நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் சிகிச்சைக்காக அதிகமாகச் செல்கின்றனர். உதாரணத்துக்குக் காசநோய்க்கான சிகிச்சைக்காக சுமார் 30 சதவிகிதத்தினர் தனியார் மருத்துவமனைகளுக்கே செல்கின்றனர்” என்றார்.
சென்னையின் பல்வேறு தனியார் மருத்துவமனைகளின் ஆலோசகரான மருத்துவர் நஷிரியா சாதிக் கூறுகையில், “குழந்தை பிறக்கும் தருவாயில் உள்ள பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு அளிக்கப்படும் உயர்தரச் சிகிச்சைகளுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசுத் திட்டங்களில் மேற்கொள்ளப்படாத உயர்தர ஸ்கேன் தனியார் மருத்துவமனைகளில் எடுக்கப்படுகிறது. பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்களுக்கு நீரிழிவு மற்றும் உயர் அழுத்தம் இருப்பதால் அவர்களுக்கு இதுபோன்ற உயர்தரச் சிகிச்சைகள் வழங்கவேண்டியுள்ளது. அதற்கான கட்டணமும் அதிகரிக்கவே செய்யும்” என்று கூறுகிறார்.
அதிகரித்துவரும் சுகாதாரச் செலவுகளைக் குறைக்க தமிழக தலைமைச் செயலாளரும் இந்த ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவருமான கிரிஜா வைத்தியநாதன் சுகாதாரத்துறையின் பல்வேறு உயரதிகாரிகளைச் சந்தித்து, முறையான கொள்கைகள் வகுத்து, மருத்துவமனைக் கட்டணங்களை நெறிமுறைப்படுத்த வலியுறுத்தி வருகிறார். தமிழகத்திலுள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான செலவுகள் தேசிய சராசரியைவிட ரூ.1,500 மற்றும் அதற்கும் மேல் இருப்பதாகவும், இதற்கு முறையான சட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் எனவும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.�,