ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான சருமம் உள்ளது. அதற்கேற்ப பராமரிக்க வேண்டும். கரடு முரடான திக்கான சருமம் கொண்டவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை அரை மேசைக்கரண்டி எடுத்து தேனுடன் ஒரு மேசைக்கரண்டி பால் பவுடர் போட்டுக் கலந்து பேஸ்ட் போல செய்யவும். இதை முகத்தில் சீராகத் தேய்த்து 20 நிமிடத்துக்கு ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்து வர சருமம் மென்மையாகும்.
ஒரு சிலருக்கு முகத்தில் ஆழமான துளைகள் காணப்படும். இவர்கள் சோள மாவுடன் பால் கலந்து அடித்து, அதில் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து பேஸ்ட் செய்து அதை முகத்தில் உடனே தடவிக் கொள்ளவும். சருமம் சீராகும்.
நாம் உண்ணும் உணவானது நார்ச்சத்துள்ளதாக இருக்க வேண்டும். இதுவே உடலின் ஜீரணத்தன்மையை அதிகரிக்கும். சருமத்துக்கும் ஆரோக்கியத்தைத் தரும். ஆப்பிள், மாம்பழம், அன்னாச்சிப்பழம் போன்ற பழங்களில் உயர்தர நார்ச்சத்து உள்ளது. அதேபோல் புரூக்கோலி, போன்ற காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவற்றை உண்பதன் மூலம் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைக்கும். உணவின் ஜீரணத்தன்மையும் அதிகரிக்கும். அதேபோல் மன அழுத்தமும், தூக்கம் குறைபாடும் சருமத்தைப் பாதிக்கும் அம்சங்களாம். எனவே தினசரி எட்டு மணி நேரம் நன்றாக உறங்குங்கள். மன அழுத்தம் இன்றி இருங்கள். நல்ல கொழுப்புகள் சருமத்தைப் பளபளப்பாக்குகிறது. இது இதயத்தையும் பாதுகாக்கிறது. எனவே, கடல் உணவுகளை அதிகம் உட்கொள்ளலாம். பளபளப்பான ஆரோக்கியமான சருமம் கிடைக்கும்.
கறுப்பு மருக்களைக் கொண்ட சருமத்துக்கு, முட்டையின் வெள்ளைக் கருவை சோள மாவுடன் கலந்து பேஸ்ட் ஆக்கி இதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது அரை மணி நேரம் வரை தடவவும். பிறகு தூய்மையான நீரில் தேய்த்துக் கழுவவும்.
ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும். பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.
2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதைத் தினசரி செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி மறையும். தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து ஆறு மாதங்கள் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும். பூசணிக்காயைச் சிறு துண்டுகளாக்கி அதைக் கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.�,