மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வரும்,மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நண்பருமான பேராசிரியர் ராமசாமியுடைய வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய ‘பாக்குமரத் தீவில் தேக்குமர(ற)த் தலைவன்’ என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று பிப்ரவரி 16 மலேசியாவில் பினாங்கு தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் செபராங் ஜெயா லைட் விடுதி அறையில் நடைபெற்றது
மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு எத்தனை இடங்கள் என்ற பரபரப்பு அக்கட்சியினர் இடையே நிலவி வரும் நிலையில் வைகோவோ ரிலாக்சாக மலேசியா சென்று இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இதில் பேசிய வைகோ, “பாக்கு மரங்களும், தேக்கு மரங்களும் எங்கும் காணப்படுகின்ற எங்கள் பினாங்கு மாநிலத்தின் தேக்கு மரம் வலுவானது; உறுதியானது. வெட்டிச் சாய்த்த பின்னரும்கூட அது எழில்மிக்க அரங்கங்களைத் தாங்கி நிற்கக்கூடியது.
வல்லினத்தையும், மெல்லினத்தையும், இடையினத்தையும் கொண்டிருக்கின்ற தமிழில், மர(ற)ம் என்ற எழுத்தில் வல்லின ற-வை அடைப்புக்குறிக்குள் போட்டிருக்கிறார். மறம் – என்றால் வீரம். மறவன் – என்றால் அஞ்சாமை. போரில் புனைகழல் மறவன் என்று புறநானூறு சொல்கிறது. அந்த மான உணர்ச்சி, வீர உணர்ச்சி, தலை தாழா தன்மான உணர்ச்சி. ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள். அந்தக் கேள்விக்கு விடை காண வேண்டும் என்று வீர கர்ஜனை புரிந்த பகுத்தறிவுப் பேரொளி, அறிவாசான் தந்தை பெரியாருடைய சுயமரியாதை உணர்வைத் தன்னுடைய நெஞ்சத்தில் ஏந்தி வாழும் மான மறவர்தான் பேராசிரியர் இராமசாமி. இந்த உலகத்தில் நாதியற்றவர்களாக தமிழர்கள் வாழும் உலகத்தில், உலகில் 123 நாடுகளில் பனிரெண்டரைக்கோடி தமிழர்கள் வாழ்கிறார்களே, அந்தத் தமிழர் உலகத்தில் ஒரு உயர் பதவியில் இருந்துகொண்டு தமிழர் உரிமைக்காகக் குரல் கொடுக்கின்ற ஒரே தலைவன் பேராசிரியர் இராமசாமி மட்டும்தான். அதனால்தான் அவர் அழைத்த மாத்திரத்தில் நான் ஓடி வருகின்றேன்.
நான் எண்ணிப் பார்க்கிறேன், 1920 ஆம் ஆண்டு, தாய்த் தமிழகத்திலிருந்து அவரது தந்தையார் பழனிச்சாமி அவர்களும், தாயார் பழனிஅம்மாள் அவர்களும் இங்கே வந்தார்கள். துணை முதலமைச்சர், என் பெற்றோர் கூலிகளாக இருந்தார்கள் என்று சொல்கிற அவரின் உயர்ந்த மனம், பண்பாடு என்னைத் தலைவணங்கச் செய்கிறது.
1949 பேரறிஞர் அண்ணா அவர்கள் இயக்கத்தைத் தொடங்கிய அந்த வருடத்தில்தான் மே 10 ஆம் நாள் நமது பேராசிரியர் இராமசாமி பிறந்தார். அவரது பெற்றோர்கள் அவருக்கு கிருஷ்ணன் என்று பெயர் வைத்திருந்தார்கள். அப்பொழுது பெயர்கள் காவல்நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப் போனவருக்குப் பெயர் மறந்துவிட்டது. உடனே இராமசாமி என்று சொல்லிவிட்டார்.
ஈரோட்டில் ஒரு இராமசாமி, பெரியார் இராமசாமி. எங்கள் பினாங்கில் ஒரு இராமசாமி அவர் பேராசிரியர் இராமசாமி” என்று சொல்ல பலத்த கைதட்டல் எழுந்தது.
“2011 ஜூன் 1 ஆம் தேதி பெல்ஜியம் நாட்டுத் தலைநகர் பிரஸ்ஸல்சில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் நடைபெற்ற மாநாட்டில், “ the only solution to solve the Tamil ethinic problem. in the island of Sri Lanka is Referendum” என்று நான் முதன் முதலாகச் சொன்னேன். உலகத்தின் பல நாடுகளில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு, கிழக்குத் தைமூர், தெற்கு சூடான் உட்பட 30 நாடுகள் மலர்ந்திருக்கின்றன. அதே போல சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கு பொதுவாக்கெடுப்பு நடத்துங்கள். உலகத் தமிழர் பாதுகாப்புக் கூட்டமைப்புக்குத் தலைவராக இதே பினாங்கில் உலக நாட்டுத் தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் பேராசிரியர் இராமசாமி.
அந்த கூட்டமைப்பிலும் இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பிரகடனம் செய்யப்பட்டது. பினாங்குப் பிரகடனம் கூறும் விதத்தில் சிங்கள இராணுவம் தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற வேண்டும், சிங்களக் குடியேற்றங்கள் அகற்றப்பட வேண்டும். சிறையில் உள்ள விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்துத் தமிழர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும். தமிழ் ஈழத்திலும், உலகெங்கும் பல நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களிடமும் சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அந்த நாள் வரும். ஈழம் மலரும். அதற்கான ஆதரவை உலக நாடுகளில் திரட்டுவதற்கு பேராசிரியர் இராமசாமி அவர்களே நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும். நாதியற்றத் தமிழருக்குக் குரல் கொடுக்கும் உங்களுக்கு தாய்த் தமிழகத்துத் தமிழர்கள் சார்பில், ஈழத் தமிழர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று உரையாற்றி முடித்தார் வைகோ.
�,”