பிகார், சிறார் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் மீது விசாரணை நடத்த டெல்லி போக்சோ நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 16) உத்தரவிட்டுள்ளது.
டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், பிகார் மாநிலம் முசாஃபர்நகரில் உள்ள 17 சிறார் காப்பகங்களில் 9 காப்பகங்களில் இருந்த சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் நடந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரியான ஏ.கே.சர்மாவை மாற்றியதாகக் கூறி முன்னாள் சிபிஐ இயக்குநர் நாகேஷ்வர ராவுக்கு சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது.
இந்த வழக்கைத் தீவிரமாக எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, சிறுமிகள் மீதான வன்கொடுமை வழக்கில் பிகார் அரசு எந்தவிதமான பதிலும் அளிக்க வில்லை என்று கண்டனம் தெரிவித்து வழக்கை டெல்லி போக்சோ நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது. இவ்வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் இன்று (பிப்ரவரி 16) விசாரணைக்கு வந்தது. அப்போது, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகளுக்கு மயக்கு ஊசி செலுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர் அஷ்வானி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் முன்னாள் மாவட்ட மாஜிஸ்திரேட் தர்மேந்திர சிங், மூத்த ஐஏஎஸ் அதிகாரி அதுல் குமார் சிங், முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோருக்கு உள்ள தொடர்பு குறித்த தகவல்களை சிபிஐ மறைக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி மனோஜ் குமார், முதல்வர் நிதிஷ் குமார், மற்றும் மூத்த அதிகாரிகள் இருவர் மீதும் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.�,