பிஎஸ்என்எல் சங்கங்களின் கோரிக்கைகளுக்கு நேர்மறையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் அனைத்திந்திய ஊழியர்கள் சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகள் சார்பாக 3 நாள் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றையை வழங்குதல், மூன்றாவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்துதல், செல் கோபுரங்களின் பராமரிப்பைத் தனியாருக்கு அளிப்பதை எதிர்த்தல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்விவகாரத்தில் நேர்மறையான நடவடிக்கைகள் எடுக்க அரசு தயாராக இருப்பதாக தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிப்ரவரி 17ஆம் தேதி இவ்வமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு நேர்மறையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசு உறுதியளிக்கிறது. அதே சமயத்தில் நிறுவனத்தை மறுமலர்ச்சி அடையச் செய்வதற்கான விரிவான முன்மொழிதலை பிஎஸ்என்எல் தயாரிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.
மேலும், ‘ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு ஆதரவளிக்கும். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு, வாடிக்கையாளர்களை பாதிக்கும் வகையில் செயல்பட மாட்டார்கள் எனவும் அரசு நம்புகிறது’ என்றும் தொலைத்தொடர்பு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.�,