விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் மானியம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் கோலப்பூரை மையமாகக்கொண்ட ‘ஸ்வபிமானி சேட்காரி சக்தனா’ விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ராஜு செட்டி, ஜூன் 20ஆம் தேதி புனேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “சர்வதேச அளவில் பால் பவுடருக்கான விலை மற்றும் தேவை குறைந்துள்ளதால் பால் பவுடர் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏற்றுமதியை மேம்படுத்த அரசு உதவ வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். அமுல் போன்று கூட்டுறவு மையங்கள் அமைக்க மத்திய வேளாண் அமைச்சகம் எங்களைக் கேட்டுள்ளது. ஆனால், அது ஒரே நாளில் நடந்துவிடாது. பசு வதைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் எங்களுக்கு இன்னும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.5 மானியமாக வழங்க வேண்டும். மேலும், ஆண்டு ஒன்றுக்கு 5 லட்சம் டன் அளவிலான பால் பவுடரை இருப்பு வைக்க அரசு அனுமதி வழங்க வேண்டும். தற்போது மகாராஷ்டிர மாநில விவசாயிகள் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.16 முதல் ரூ.20 வரையில் பெறுகின்றனர். ஆனால், பால் உற்பத்திக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.35 வரையில் செலவாகிறது. எனவே விவசாயிகளைக் காக்க அரசு இதில் தலையிட்டு உதவ வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.�,