பெரம்பலூர் பாலியல் விவகார வழக்கினை மூடி மறைத்து அதிமுக எம்.எல்.ஏவைக் காப்பாற்றி விடலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்துவிடக் கூடாது என்று ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான பரபரப்பு தற்போதுதான் சற்று ஓய்ந்துள்ள நிலையில், அதுபோலவே பெரம்பலூரில் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூரில் வேலைக்கு ஆள் எடுக்கிறோம் என்ற பெயரில் பெண்களை லாட்ஜ்களுக்கு அழைத்து நேர்காணல் நடத்தி, ஆசை காட்டி, ஆபாச வீடியோ படம் எடுத்து, அதை வைத்து அதிமுக எம்.எல்.ஏ.வின் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்திய விவரங்களை ஆடியோ டேப் உரையாடல் ஆதாரத்துடன் வழக்கறிஞர் அருள் வெளியிட்டுள்ளார். இந்த ஆடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதில் பேசும் பெண், பெரம்பலூர் எம்.எல்.ஏ இளம்பை தமிழ்ச்செல்வனை நேரில் பார்க்க வற்புறுத்தினார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இதனைக் குறிப்பிட்டு இன்று (ஏப்ரல் 26) அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “பொள்ளாச்சி விவகாரம் போலவே இந்தப் பாலியல் புகாரை வெளியே சொல்ல முடியாமல் எப்படி பெண்கள் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அந்த பெண்ணின் பேட்டி உணர்த்துகிறது. ஆனால், அந்தக் கொடூரத்தைச் செய்தவர்கள் மீது கொடுக்கப்பட்டுள்ள இந்தப் புகாரையும் கூட மூடி மறைக்கும் விதத்தில் தான் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறதே தவிர -உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்கிடவோ அல்லது பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச உணர்வைப் போக்கிடவோ முன்வரவில்லை” என்று விமர்சித்துள்ளார்.
பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக அரசின் தோல்வி இப்போது பெரம்பலூரில் எதிரொலித்திருக்கிறது. பெரம்பலூர் பாலியல் புகார்களைத் தீவிரமாக விசாரித்து, அப்பாவிப் பெண்களிடம் பாலியல் வன்முறை செய்தவர்கள் அனைவரையும் தயவு தாட்சண்யமின்றி கைது செய்திட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடும் ஸ்டாலின், பெரம்பலூர் வழக்கினை மூடி மறைத்து அதிமுக எம்எல்ஏவைக் காப்பாற்றி விடலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்துவிடக் கூடாது” என்றும் எச்சரித்துள்ளார்.
மே 23 ஆம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது பொள்ளாச்சி வழக்கு மற்றும் பெரம்பலூர் வழக்கு போன்றவற்றை நீர்த்துப் போக வைக்க அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகள், அதற்குத் துணை போன அதிகாரிகள் ஆகியோர் பற்றி தனி விசாரணை நடத்தப்படும் என்றும், இந்த இரு வழக்கிலும் உள்ள உண்மைக் குற்றவாளிகள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும், யாருக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனது அறிக்கையில் ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறார்.�,”