தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி முருகன் மீதான பாலியல் புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
ஐஜி முருகன் மீதான பாலியல் புகாரை விசாகா கமிட்டி விசாரித்து வந்த நிலையில், இந்தப் புகார் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த விசாகா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
ஐஜி முருகனை பணியிடை மாற்றம் செய்தால்தான் இவ்வழக்கை சிபிசிஐடி காவல் துறையால் சுதந்திரமாக விசாரணை நடத்த முடியும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் இன்று (செப்டம்பர் 2) வெளியிட்ட அறிக்கையில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் இதே போன்று ஒரு பாலியல் புகார், அப்போதைய சட்டம் ஒழுங்கு டிஜிபியின் மீதே எழுந்தபோது அன்று மாலையே அவரைப் பணி நீக்கம் செய்தார் ஜெயலலிதா. ஆனால், ஜெயலலிதாவின் ஆட்சியை நடத்துவதாகச் சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி வரும் எடப்பாடி பழனிசாமியின் அரசு, ஒரு பெண் அதிகாரியின் கவுரவத்தை கொச்சைப்படுத்தும் வகையில் தொடர்ந்து அலட்சியமாக நடந்துகொள்கிறது” என கூறியுள்ளவர், பெண் அதிகாரி புகார் கொடுத்து ஒரு மாதம் ஆகப்போகிற நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு வழக்கு கூட பதிய முன்வராதது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.
மேலும் “முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் மீது லஞ்சப் புகார் மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது போன்ற புகார்கள் எழுந்து, நீதிமன்ற உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன், குட்கா விவகாரத்திலும் மற்றும் லஞ்சம் பெற்ற விவகாரத்திலும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் மீதான வழக்கையும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் விசாரித்து வந்தார்கள். இவை எல்லாமே, பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஐ.ஜி., முருகனின் மேற்பார்வையிலேயே நடந்து வருவதால்தான், அவரை இடம் மாற்றம் செய்ய முதல்வர் பழனிசாமியின் அரசு தயங்குகிறது என்ற குற்றச்சாட்டும் பலரால் எழுப்பப்பட்டது.
ஐஜி முருகனைக் காப்பாற்ற முயலும் தமிழக முதல்வரின் நிர்வாகத்தின் கீழ்தான் சி.பி.சி.ஐ.டி. காவல் துறையும் வருகிறார்கள் என்பதால் அவர்களை நியாயமாக செயல்பட விடமாட்டார்கள். எனவே, இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி, தமிழகத்தை சாராத ஓர் அதிகாரியின் மேற்பார்வையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவேண்டும்” என்று தினகரன் தெரிவித்துள்ளார்.�,