பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் தொடர்புடைய மதகுருக்கள், தாங்களாகவே நீதிக்கு உட்பட்டு தண்டனையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பின்பு கடவுளின் நியாயத் தீர்ப்புக்குத் தயாராக வேண்டும் என்றும் போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.
நேற்று (டிசம்பர் 21) இத்தாலியிலுள்ள வாடிகன் நகரில் போப் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் குறித்துப் பேசினார். அப்போது, ஆண்டுதோறும் மதகுருக்கள் செய்த பாவங்கள், ஊழல்கள் கத்தோலிக்கத் திருச்சபையைப் பாதிப்பதாகத் தெரிவித்தார். “பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் தாங்களாகவே முன்வந்து நீதிக்கு உட்பட்டு தண்டனையைப் பெற்று, கடவுளின் நியாயத் தீர்ப்புக்குத் தயாராக வேண்டும். யாரும் தங்களுடைய பதவியையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. கடவுள் குறித்த பயம் இல்லாமல் இது போன்ற செயல்களில் ஈடுபடும் மதகுருக்களின் பதவி பறிக்கப்பட்டு, கத்தோலிக்கத் திருச்சபையை விட்டு நீக்கப்படுவார்கள். கத்தோலிக்க திருச்சபையின் நம்பகதன்மையை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேவலாயங்களில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை தொடர்ந்து பெருகி வருகிறது. இதனால், பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையும் அவருடைய குடும்பமும் சிதைந்து விடுகிறது. இந்த சம்பவங்கள் தேவாலயத்தின் நிலைப்பாட்டை மோசமாகச் சேதப்படுத்துகிறது” என்று கூறினார் போப் பிரான்சிஸ்.
இதைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் குறித்துப் பேசியவர், இந்த பண்டிகையை நுகர்வுக் கலாச்சாரமாக மாற்ற வேண்டாம் என்று தெரிவித்தார். “குறைந்தபட்சம் ஒரு ஏழைக்காவது ஆக்கப்பூர்வமான உதவியைச் செய்து கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட வேண்டும். நம் நாட்டில் நடக்கும் அநீதிகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் போக்குவதற்கு நம்மால் முடிந்த பங்களிப்பைச் செய்ய உறுதி ஏற்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.
சமீபகாலமாக அமெரிக்காவில் பாதிரியார்கள் மீது குற்றம்சாட்டப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பாலியல் வழக்கில் தொடர்புடைய லாஸ் ஏஞ்சல்ஸ் பாதிரியார் ஒருவர், கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அளித்த கடிதத்தை, போப் பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டார். அதேபோன்று நியூயார்க்கில் பாதிரியாரால் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.�,