பாலகிருஷ்ண ரெட்டியின் தண்டனைக்குத் தடை விதிக்க மறுப்பு!

Published On:

| By Balaji

தமிழக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

1998ஆம் ஆண்டு ஒசூர் அருகே உள்ள பாசனூர் பகுதியில் கள்ளச் சாராய விற்பனையைத் தடை செய்யக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் ஜனவரி 6ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10,500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதோடு பொது சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டது.

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஜனவரி 11ஆம் தேதி விசாரித்த நீதிபதி பார்த்திபன், பாலகிருஷ்ண ரெட்டியை குற்றவாளி என அறிவித்துப் பிறப்பித்த தீர்ப்புக்குத் தடைவிதிக்கவோ, நிறுத்திவைக்கவோ முடியாது என்று உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். பிப்ரவரி 3ஆம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, பாலகிருஷ்ண ரெட்டி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்களித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவ்வழக்கு மீண்டும் இன்று (பிப்ரவரி 18) விசாரணைக்கு வந்த போது, பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், மேல்முறையீடு வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராவதில் இருந்து அளிக்கப்பட்ட விலக்கு தொடரும் என்றும் இவ்வழக்கு தொடர்பாக, 4 வாரத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share