�பார்த்திபன் இயக்கவுள்ள ஒத்த செருப்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
பார்த்திபன் இயக்கிய ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் சாந்தனு பாக்யராஜ், பார்வதி நாயர், பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த ‘நானும் ரௌடிதான்’ படத்தில் பார்த்திபன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பார்த்திபனைத் திரையில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. இந்த நிலையில், மீண்டும் ஒரு படத்துக்குக் கதை எழுதி இயக்குவதற்கு பார்த்திபன் திட்டமிட்டுள்ளார். இந்தப் படத்துக்கு ‘ஒத்த செருப்பு’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். ஒளிப்பதிவு பணிகளை ராம்ஜி கையாளவுள்ளார். படக்குழு பற்றிய இதர விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில், “வாழ்த்துகள் பார்த்திபன் சார். ஒத்த செருப்பு முதல் பார்வை” என்று தெரிவித்துள்ளார். அதற்கு பார்த்திபன் பதிவிட்ட பதில் ட்வீட்டில், “ஆத்தா நான் உண்டாயிட்டேன். பிரசவ பரவசம் இப்பவே. துவக்கி வைத்த நண்பர் திரு.விஜய் சேதுபதிக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.�,