குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின்படி பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் என்பவர் பொதுநல மனுவொன்றைத் தாக்கல் செய்தார். அதில், “பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையைத் தடுக்கவும் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், மாநில அரசுகள் குடும்ப வன்முறைச் சட்டத்தில் இருந்து பாதுகாப்பதற்கான பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என கடந்த ஜூன் மாதம் மத்திய குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில் அனைத்து மாநில அரசுகளும் உடனடியாகப் பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பதாகவும், தமிழகம் முழுவதும் 33 அதிகாரிகள் மட்டுமே இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில் புகார்களை மேஜிஸ்ட்ரேட் நேரடியாக அளிக்கலாம். அவ்வாறு பெறப்படும் புகார் மீது பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு மேஜிஸ்ட்ரேட்கள் உத்தரவிடுகின்றனர். ஆனால் மேஜிஸ்ட்ரேட்கள் நேரடியாக விசாரணை நடத்தலாம் என சட்டத்தில் உள்ளது.
இவ்வாறு பெறப்படும் புகாரை 60 நாட்களுக்குள் விசாரணை செய்து முடிக்க வேண்டும் என்ற சட்ட விதிகள் இருக்கின்றன. ஆனால் அதனை முழுமையாகச் செயல்படுத்தவில்லை. எனவே தாலுகா அளவில் பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க உத்தரவிட வேண்டும். காலியாக உள்ள பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். புகார்களை உரிய காலத்தில் விசாரணை செய்து முடிக்க உத்தரவிட வேண்டும்” என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானி, நீதிபதி துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பாகத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சமூக நலத்துறை செயலாளர், உயர் நீதிமன்றப் பதிவாளர் ஆகியோர் ஆறு வாரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி மாதம் 25ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர் நீதிபதிகள்.�,