கத்தோலிக்கப் பாதிரியார்களின் பாலியல் அத்துமீறல்களுக்குக் போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேவாலயத்துக்குப் பாவ மன்னிப்பு கேட்டு வரும் பெண்கள், சிறுமியர் ஆகியோரிடம், கத்தோலிக்க மதகுருக்கள் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், போப் பிரான்சிஸ் 1.2 பில்லியன் கத்தோலிக்க மக்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், இதுபோன்ற சம்பவங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். தேவலாயங்களில் நடைபெறும் பாலியல் வன்முறைகள் மறைக்கப்படுவதும், அதற்கு மன்னிப்பு கோராமல் இருப்பதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“பாதிக்கப்பட்டவர்களின் வலியை நெடுங்காலமாகக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டோம். திருச்சபையாக என்ன செய்திருக்க வேண்டுமோ, அதைச் செய்யவில்லை என்பதை வெட்கத்துடன் ஒப்புக்கொள்வோம். பலரின் வாழ்க்கையில் ஏற்பட்ட சேதத்தைப் புரிந்துகொண்டு துரித நடவடிக்கையை எடுக்கத் தவறிவிட்டோம். சிறுவர்கள் மீது நாம் அக்கறை காட்டாமல் விட்டுவிட்டோம்” என்று கூறியுள்ளார். ஒருவரின் துயரம் அனைவருக்குமானது என்ற பைபிளின் வாக்கியத்தைச் சுட்டிக்காட்டிய போப், நடந்த உண்மைகளை தேவாலயங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
“பாதுகாக்கக்கூடிய இடத்தில் உள்ள நபர்கள் செய்யும் அராஜகங்களை துயரத்துடனும் வெட்கத்துடனும் தேவாலயங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் செய்யும் பாவங்களுக்கும், பிறரின் பாவங்களுக்கும் மன்னிப்பு கோருவோம் என போப் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வாட்டிகன் நகரிலிருந்து, மக்களுக்கு போப் கடிதம் எழுதுவது இதுவே முதல்முறையாகும்.
**அமெரிக்கா**
பெனிசில்வேனியாவில் ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த விளக்கமான விசாரணை அறிக்கையொன்று சமீபத்தில் வெளியானது. அதில், 1000 சிறுமிகள் 300 பாதிரியார்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக விசாரணை அறிக்கை தெரிவித்தது. இன்னும் ஏராளமானார்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்தக் குற்றங்கள் தேவாலயங்களால் மறைக்கப்பட்டுள்ளன, அதில் சில வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாத அளவுக்குப் பழையதாகிவிட்டன என விசாரணையின் முடிவில் தெரிய வந்துள்ளது.�,”