பாடப்புத்தகங்கள் கிடைக்காததால் மாணவர்கள் அவதி!

Published On:

| By Balaji

காலாண்டுத் தேர்வுக்கான அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையில், இன்னும் பல பள்ளிகளுக்குப் பாடப்புத்தகங்கள் சென்றடையவில்லை என்ற தகவல் தெரிய வந்துள்ளது.

தமிழகம் முழுவதும், இந்தாண்டு ஜூன் மாதம் முதலே பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளிகள் தொடங்கி மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் ஒரு வார காலத்தில் காலாண்டுத் தேர்வுகளும் ஆரம்பமாகவுள்ளன. இதற்கான அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழைத் தவிர பிற மொழிப் பாடங்களை தேர்வு செய்யும் வசதி, தமிழக மாணவர்களுக்கு உண்டு. தமிழகம் முழுவதும், சுமார் 22,000 மாணவர்கள் 11ஆம் வகுப்பில் பிரெஞ்சை மொழிப்பாடமாக எடுத்துப் படித்து வருகின்றனர். இந்தி, சமஸ்கிருதம், ஜெர்மன், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றைத் தேர்வு செய்யும் வசதியும் உண்டு. கன்னியாகுமரி மாவட்டத்தில்உள்ள பல பள்ளிகளில் மலையாளத்தை மொழிப்பாடமாக மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சுற்றியுள்ள மாணவர்கள் கன்னட மொழிப்பாடத்தைப் பயில்கின்றனர். சென்னை மற்றும் கோயம்புத்தூரைச் சேர்ந்த மாணவர்கள் பலரும் ஜெர்மனைமொழிப்பாடமாகத் தேர்வு செய்து படிக்கின்றனர்.

இந்நிலையில், 11ஆம் வகுப்பில் பிற மொழிப்பாடங்களைத் தேர்வு செய்த மாணவர்களுக்கு இன்னும் பாடப் புத்தகங்கள் சென்று சேரவில்லை. இணைய தளத்தில் புத்தகங்களைப் பதிவேற்றம் செய்து தேர்வுக்கு தயாராகும்படி, ஆசிரியர்கள் மாணவர்களை நிர்பந்திப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் புரியாமல் குழம்பிப்போய் உள்ளனர்.

பிரெஞ்சு ஆசிரியர்களின் இந்திய சங்கத்தின் செயலாளர் (தென் மண்டலம்) சந்திரசேகரன் கூறுகையில், “மாணவர்கள் புத்தகமே இல்லாமல் தேர்விற்கு தயாராவது மிகவும் கடினமான விஷயம். விரைவில் அரசாங்கம் மாணவர்களுக்குப் புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

பிற மொழிப்பாடங்கள் வசதி கொண்ட பள்ளிகள், தங்களுக்கு எத்தனை புத்தகங்கள் தேவை என்ற விவரத்தை ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தலைமைக் கல்வி அதிகாரிக்குத் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இவ்விவகாரம் குறித்து தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்விச் சேவைகள் கழகத்தின் தலைவர் வளர்மதி கூறியபோது, அனைத்துப் பள்ளிகளுக்கும் சரியான நேரத்தில் புத்தகங்களை வழங்கிவிட்டதாகத் தெரிவித்தார். “தற்போது எங்களிடம் புத்தகங்கள் இல்லாததால், கூடுதலான புத்தகங்கள் தேவைப்படும் பள்ளிகளுக்குக் கூடிய விரைவில் புத்தகங்கள் அனுப்ப நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share