]பாடகராகும் சிவகார்த்திகேயன் மகள்!

Published On:

| By Balaji

நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் பாடகராக அறிமுகமாகவுள்ளார்.

நடிப்பு மட்டுமல்லாது திரைப்படத் தயாரிப்பிலும் இறங்கியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் தனது நிறுவனத்தின் முதல் படமாக கனா என்னும் படத்தைத் தயாரித்துவருகிறார். அவருடைய கல்லூரித் தோழரும், நடிகர், பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகத் திறமையைக் கொண்டவருமான அருண்ராஜா காமராஜ், இந்தப் படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார்.

மேலும் இன்னொரு கல்லூரித் தோழரான ‘மரகத நாணயம்’ புகழ் திபு நினன் தாமஸ் இதற்கு இசையமைக்கிறார். இதில் கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். அனுஷ்கா, நயன்தாரா போன்ற மிகச் சிலரே கதையின் மெயின் ரோலில் சமீபமாக நடித்துவரும் நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கேரக்டரில் இந்தப் படத்தில் நடிப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷைப் பொறுத்தவரை தற்போதைய கணக்கின்படி தமிழில் அதிகமான படங்களைக் கைவசம் வைத்திருப்பவர்களைக் கணக்கெடுத்துப் பார்த்தால் அவர்தான் முன்னிலையில் இருப்பார். அந்தளவுக்குப் பல படங்களில் பிஸியாக நடித்துவருகிறார் அவர். இந்தப் படத்தின் படப்பிடிப்புப் பணி முடிந்துள்ள நிலையில் இதன் இசை மற்றும் டீஸரை இன்று (ஆகஸ்ட் 23) வெளியிடவுள்ளது படக்குழு.

இது பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் படம் என்னும் காரணத்தால் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இசையை வெளியிடவுள்ளார். இந்தப் படத்தில் தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள அன்பைப் பதிவு செய்யும் விதமாக வாயாடி பெத்த புள்ள என்ற பாடல் இடம்பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா இந்தப் பாடலை பாடியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆராதனா குழந்தைதான் என்றாலும் இசை மீது அதிக ஆர்வம் உள்ளவர் என நடிகர் சிவகார்த்திகேயன் பலமுறை கூறியுள்ளார்.

சமீபத்தில் ஒருமுறை விஜய் டிவியின் நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள வந்தார் சிவகார்த்திகேயன். அப்போது தனது கையொப்பமிட்ட சிறிய அளவிலான கிட்டாரைப் பரிசாக அனுப்பிவைத்து அதை இசையின்மீது ஆர்வமுள்ள அவரது மகளுக்கு வழங்கச் சொல்லியிருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share