மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் குறித்த முதல்கட்ட பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
17ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடக்கிறது. மே 19ஆம் தேதி 543 தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவுகள் முடிந்து மே 23ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. ஏப்ரல் 11ஆம் தேதி 91 தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதல் கட்டப் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் உள்ள அனைத்து (42) தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசம், பிகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் 49 தொகுதிகளுக்கும் முதல் கட்ட வாக்குப் பதிவு நடக்கிறது. முதல் கட்டத் தேர்தலில் போட்டியிடவுள்ளவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய மார்ச் 25ஆம் தேதி இறுதி நாளாகும். இதற்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்களை அறிவிப்பதற்கான பணியில் பாஜக தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.
இன்று நடக்கவுள்ள மத்திய தேர்தல் குழு கூட்டத்துக்குப் பிறகு முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று அக்கட்சி வட்டாரங்களிலிருந்து வெளியாகும் தகவல்கள் கூறுகின்றன. இக்கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்கவுள்ளனர். முதல் கட்ட வாக்குப் பதிவு நடக்கும் தொகுதிகளில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களே பெரும்பாலும் இன்று அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து மார்ச் 18 மற்றும் 22 அன்று நடைபெறும் மத்தியத் தேர்தல் குழு கூட்டங்களில் பாஜக சார்பில் போட்டியிடும் அனைத்து தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் அறிவிக்கப்படவுள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழகத்தில் எந்தெந்தத் தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது என்பது இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சிவகங்கை தொகுதியில் போட்டியிடவுள்ளதாகக் கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் அதிகாரபூர்வமற்ற செய்தி பரவிவருகிறது. பாஜகவின் மூத்த தலைவரான எல்கே.அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் 4 பேருக்குப் போட்டியிட பாஜக தலைமை தொகுதி ஒதுக்க மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மார்ச் 9ஆம் தேதி நடந்த பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டு, 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொகுதி ஒதுக்கக் கூடாது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்களுக்கு இம்முறை தொகுதி ஒதுக்கப்படாது எனவும் பாஜக வட்டாரங்களிலிருந்து வெளியாகும் தகவல்கள் கூறுகின்றன. எல்.கே.அத்வானி தேர்ந்தெடுக்கப்பட்ட குஜராத், காந்தி நகர் தொகுதியில் பாஜக தலைவர் அமித் ஷா போட்டியிடவுள்ளார் எனக் கூறப்படுகிறது. அதேபோல மோடி இம்முறை வாரணாசியில் மட்டுமே போட்டியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.�,”