பாஜக – மம்தா மேட்ச் ஃபிக்ஸிங்: இடதுசாரிகள் புகார்!

public

மேற்கு வங்காள மாநிலத்தில் திருணமூல் காங்கிரசை எதிர்ப்பதற்காக, பாஜகவும், மார்க்சிஸ்ட் கட்சியும் உள்ளாட்சித் தேர்தல் களத்தில் புரிந்துணர்வுடன் செயல்படுவதாக அரசியல் அரங்கில் செய்திகள் கசிந்த நிலையில், இதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் மேற்கு வங்காள மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் சூரிய காந்தா மிஸ்ரா இது தொடர்பாக நேற்று முன்தினம் கொல்கத்தாவில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகமான முசாஃபர் அகமது பவனில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது மார்க்சிஸ்ட் மீதான புகார்களுக்கு பதில் அளித்ததோடு, மம்தா பானர்ஜியின் மறுபக்கமாக சில விஷயங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசியதைத் தொகுத்துத் தருகிறோம்.

**அடிப்படையற்ற பொய்ப் பிரச்சாரம்!**

பாஜகவுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது என்பது உள்நோக்கத்துடன் கூடிய திரித்துக் கூறப்பட்ட அடிப்படையற்ற பொய்ப் பிரச்சாரம்தான் . இதை திருணமூல் காங்கிரசும் பாஜகவும் சேர்ந்தே பரப்பிவருகின்றன.

மேற்கு வங்காளத்தில் 2014ஆம் ஆண்டில் இருந்தே பாஜகவும், திருணமூல் காங்கிரசும் சாதிய மத உணர்வுகளைத் தூண்டி அரசியல் லாபம் பார்க்க முயன்றுவருகின்றன. அவர்களது தவறுகளை மறைக்கவே இடதுசாரிகள் மீது பழி போட்டுவருகின்றனர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சியின் முழக்கமே, ’பாஜகவை வெளியேற்றி நாட்டைக் காப்போம், திருணமூல் காங்கிரசை வெளியேற்றி மேற்கு வங்காளத்தைக் காப்போம்’ என்பதுதான்.

**மம்தா ஆட்சியில் அதிகரித்த ஆர்.எஸ்.எஸ். பலம்!**

பாஜகதான் நாட்டின் முக்கியமான அச்சுறுத்தலாக இருக்கிறது. பாஜகவை வழிநடத்துவது ஆர்.எஸ்.எஸ்.தான். திருணமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து மேற்கு வங்காள மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அமைப்பு பலம் முன்பு இருந்ததை விட 11 மடங்கு அதிகரித்துள்ளது. இதிலிருந்தே பாஜகவுக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கும் மம்தா பானர்ஜி எந்த அளவு உதவிவருகிறார் என்பதை வெளிப்படையாகத் தெரிந்துகொள்ளலாம்.

பாஜகவுக்கும், திருணமூல் காங்கிரசுக்கும் பொது எதிரியாக மார்க்சிஸ்ட் கட்சி இருக்கிறது. திருணமூல் காங்கிரஸ் தனக்கு முக்கிய எதிர்க்கட்சியாக பாஜக வர வேண்டும் என்றே விரும்புகிறது. அதனால் பல வகைகளில் பாஜகவுக்கும், திருணமூல் காங்கிரசுக்கும்தான் உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதையெல்லாம் மக்களிடம் இருந்து மறைக்கத்தான் இடதுசாரிகளுக்கும், பாஜகவுக்கும் புரிந்துணர்வு என்ற பொய் பரப்பப்படுகிறது. மேற்கு வங்காள மாநில மக்களும், நாட்டு மக்களும் இந்த பொய்க்குப் பின்னால் இருக்கும் உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும்.

**மேட்ச் ஃபிக்ஸிங்**

எங்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகியோ, உறுப்பினரோ பாஜகவுடனோ அல்லது எதிர்க்கட்சிகளுடனோ அரசியல் தொடர்பு வைத்திருந்தால் அவர்களை உடனடியாக கட்சியில் இருந்து விலக்கிவைப்போம் என்பது கட்சியின் அமைப்பு விதி. இதை நாங்கள் பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறோம். இந்த விதியின்படி ஏற்கனவே இரு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் நாங்கள் உறுதியாகவும், சமரசமற்ற கெடுபிடியோடும் இருக்கிறோம்.

திருணமூல் காங்கிரஸும் பாஜகவும் மேட்ச் ஃபிக்சிங் செய்து மேற்கு வங்காள அரசியல் களத்தில் விளையாடி வருகின்றன. திருணமூல் காங்கிரஸின் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் முகுல் ராய், தற்போது பாஜகவில் இருக்கிறார். அதேபோல தற்போது பாஜகவில் இருக்கும் லாக்கெட் சாட்டர்ஜியும் சமீப காலம் வரையில் திருணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். ஆனால் இதுபோன்று ஒரு இடது சாரி தலைவரைக்கூட யாராலும் சுட்டிக் காட்ட முடியாது. திருணமூல் காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்டால் பாஜகவில் சேருவதும், பாஜகவில் இருந்து வெளியேறி திருணமூல் காங்கிரசில் சேருவதும் இங்கே வழக்கமான ஒன்று. இவ்விரண்டு கட்சிகளுமே இயற்கையாகப் புரிந்துணர்வு கொண்டவை என்பது இதில் இருந்து தெரிகிறது.

**நாடியாவில் நடந்தது என்ன?**

நாடியா மாவட்டத்தில் நடந்த ஊர்வலத்தில் மார்சிஸ்ட் எம்.எல்.ஏ.வான ரமா பிஸ்வாஸ் பாஜகவினருடன் கலந்துகொண்டதாக ஒரு படம் பரப்பப்பட்டு… அதன் மூலமாகத்தான் பாஜக, மார்க்சிஸ்ட் புரிந்துணர்வு என்ற மாயத் தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. அது தேர்தல் பிரசாரம் தொடர்பான ஊர்வலம் அல்ல. திருணமூல் காங்கிரஸாரின் தாக்குதலைக் கண்டித்து கிராம மக்கள் இணைந்து அந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தனர். அந்த ஊர்வலத்தில் தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் ரமா பிஸ்வாஸையும் மக்கள் அழைத்திருந்தனர். அதனால் அவர் அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டார். இந்த ஊர்வலத்துக்கும் அரசியல் புரிந்துணர்வுக்கும் துளியும் தொடர்பில்லை.

உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை மார்க்சிஸ்ட் வேட்பாளரோ, இடது சாரி அணிகளின் வேட்பாளரோ போட்டியிடாத இடங்களில் பாஜகவையும், திருணமூல் காங்கிரசையும் எதிர்க்கும் வேட்பாளர்களை ஆதரிக்குமாறு மக்களிடம் மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள் வைத்திருக்கிறது.

இவ்வாறு விரிவான விளக்கம் அளித்திருக்கிறார் மேற்கு வங்காள மார்க்சிஸ்ட் செயலாளர் சூரிய காந்தா மிஸ்ரா.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *